- அஇஅதிமுக
- சட்டமன்ற உறுப்பினர்
- திருப்பூர்
- தாராபுரம் காவல் துறை
- தாராபுரம் கச்சேரி வீதி
- சக்திநகர்
- திருப்பூர் மாவட்டம்…
திருப்பூர்: ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கச்சேரி வீதி, சக்தி நகரில் வசிப்பவர் குறிஞ்சிவேந்தன் (63). ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலரான இவர், கரூர் சாலையில் நாற்றுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர், தாராபுரம்- கரூர் சாலை காளிபாளையம் அருகே 2008ம் ஆண்டு தங்கவேல் என்பவரிடம் ரூ.1 லட்சத்திற்கு ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். இந்நிலையில் அந்த நிலத்திற்குள், தன்னுடைய 10 சென்ட் இடம் இருப்பதாகவும், அதை மீட்டுத்தர வேண்டும் என்றும் ஒட்டன்சத்திரம் கூத்தம்பூண்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருப்பூர் எஸ்பியிடம் புகார் செய்தார். விசாரணையின்போது வனத்துறை அலுவலரான குறிஞ்சிவேந்தன், உரிய ஆவணங்களை மாவட்ட காவல்துறையில் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் பிரச்னைக்கு தீர்வுசெய்து கொள்கிறோம் எனக்கூறியதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் குறிஞ்சிவேந்தன், விசாரணை நடத்தியதில் தாராபுரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, செல்வராஜ் அவரது சகோதரரும் கால்நடை மருத்துவருமான சுரேஷ்குமார் ஆகிய 3 பேரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. செல்வராஜ், 10 சென்ட் இடத்தை 10 வருடங்களுக்கு முன் இறந்து போன தங்கவேல், அவரது வாரிசுதாரர்கள் நாச்சிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோரிடம் கிரையம் பெற்றதாக கூறி, மூன்று நபர்களும் உயிருடன் இருப்பதாக கால்நடை மருத்துவரான சுரேஷ்குமாரிடம் இருந்து சான்றிதழ் பெற்று, கடந்த 2018ல் போலியான பத்திரப்பதிவு ஒன்றை தாராபுரம் சார்-பதிவாளர் கண்ணன் ஒத்துழைப்புடன் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமியின் மனைவியும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான சத்தியபாமா கடந்த 2025 அக்டோபர் மாதம் குறிஞ்சிவேந்தனின் வீட்டுக்கு இரவு நேரத்தில் சென்று போலி பத்திரப்பதிவு குறித்து புகார் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 2026 தேர்தலில் நான்தான் அதிமுக வேட்பாளர். என்னை பகைத்துக் கொண்டு நீ எதுவும் செய்ய முடியாது. கொலை செய்யவும் நான் தயங்க மாட்டேன் எனக்கூறி மிரட்டல் விடுத்ததாக குறிஞ்சிவேந்தன் தரப்பில் தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரில் முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, அவரது மனைவி சத்தியபாமா, போலி ஆவணம் தயாரித்த செல்வராஜ், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக சான்று வழங்கிய கால்நடை மருத்துவர் சுரேஷ்குமார், போலி பத்திரம் பதிவு செய்த சார்பதிவாளர் கண்ணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். இதன்பேரில் தாராபுரம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தகவல் அறிந்த முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, தனக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரது மனைவி சத்தியபாமா சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
