* போலீசாரை தாக்க முயற்சி
* போக்குவரத்து பாதிப்பு
தாராபுரம் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (35), மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், நேற்று இரவு திடீரென போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிக அதிகமாக உள்ள பூக்கடை சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து, தனது இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அனைத்து பேருந்துகளையும் செல்ல விடாமல் தடுத்துநிறுத்தி ரேஷன் கார்டு இல்லாத எனக்கு, பொங்கல் பரிசு தொகை ரூ.3 ஆயிரம் வழங்க மறுக்கிறார்கள். இதை தட்டிக்கேட்க யாருமில்லை கூறி திடீரென கூச்சலிட்டு ஆரவாரம் செய்தார்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், பெரியசாமி கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, போலீசாரை தாக்க முயன்றார். அப்போது, ‘‘நான் இந்து முன்னணிகாரன். என் மீது கை வைத்தால் பிரச்னை வேறாக மாறும்’’ எனக்கூறி மிரட்டல் விடுத்து நடுரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரது கைகளை பிடித்து தூக்கி வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போதை ஆசாமியின் செயலால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
