×

நார்வே கிளாசிகல் செஸ்: மேக்னஸ் கார்ல்சன் 7ம் முறை சாம்பியன்; குகேஷ் அதிர்ச்சி தோல்வி

ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக நம்பர் 1 செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக கைப்பற்றினார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. 9வது சுற்றுகளின் முடிவில், நார்வேயை சேர்ந்த உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2ம் இடம் வகித்தார். இப்போட்டியில் யார் சாம்பியன் பட்டம் பெறுவார் என்பதில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், நேற்று நடந்த கடைசி சுற்றுப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகேசியுடன் மோதினார். இப்போட்டியில் எரிகேசியில் கை ஓங்கியிருந்தபோதும், சாமர்த்தியமாக போட்டியை டிரா செய்தார் கார்ல்சன். அதனால் புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் அவர் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக தட்டிச் சென்றார். மற்றொரு 10வது சுற்றுப் போட்டியில் குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவிடம் தோல்வியை தழுவி அதிர்ச்சி தந்தார். அதனால் அவர், 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார். வெற்றி பெற்ற கரவுனா 15.5 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். மற்றொரு அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா 14 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், இந்திய வீரர் எரிகேசி 13 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், சீன வீரர் வெ யி 9.5 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் இருந்தனர்.

* உக்ரைன் வீராங்கனை மகளிர் செஸ் சாம்பியன்
மகளிர் கிளாசிகல் செஸ் பிரிவில் உக்ரைன் வீராங்கனை அன்னா மாஸிசுக் 16.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர் கடைசி சுற்றில் இந்திய வீராங்கனை வைஷாலியிடம் தோல்வியை தழுவியபோதும் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்தார். இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, சீன வீராங்கனைக்கு எதிரான கடைசி சுற்றுப் போட்டியில் டிரா செய்ததால், 15 புள்ளிகளுடன் 3ம் இடமே பெற முடிந்தது. இப்போட்டியின் முடிவில் சீன வீராங்கனை லெ டின்ஜீ 16 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார். மற்றொரு சீன வீராங்கனை ஜு வென்ஜுன் 13.5 புள்ளிகளுடன் 4ம் இடத்தையும், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி ரமேஷ்பாபு 11 புள்ளிகளுடன் 5ம் இடத்தையும் பிடித்தனர்.

The post நார்வே கிளாசிகல் செஸ்: மேக்னஸ் கார்ல்சன் 7ம் முறை சாம்பியன்; குகேஷ் அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.

Tags : Norway Classical Chess ,Magnus Carlsen ,Kukesh ,Stavanger ,Norway Classical Chess Championship ,Norwegian Chess Championship ,Stavanger, Norway ,Dinakaran ,
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டி20 இந்திய அணி வெற்றி