சென்னை: மோடி அரசாங்கத்தால், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல், விலைவாசி உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலையொட்டி லோக்நிதி சிஎஸ்டிஎஸ் ஆய்வு நிறுவனம், 9 மாநிலங்களில் 10,019 பேரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,கடந்த 5 ஆண்டுகளில் நகரங்களில் வேலை கிடைப்பது என்பது கடினமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, சுமார் 62% பேர் வேலை கிடைப்பது கடினமாகிவிட்டதாக கூறியுள்ளனர். 18% பேர் ஒரு மாற்றமும் இல்லை அப்படியே தான் இருக்கிறது என கூறியுள்ளனர். 12% மட்டுமே வேலை கிடைப்பது எளிதாகிவிட்டது என கூறியுள்ளனர். மீதமுள்ள 8% மக்கள் பதிலளிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர்.
அதிலும், குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மக்கள் வேலை வாய்ப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அதே போல் உள்ளூரில் வேலை கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நகரங்களில் சுமார் 65% பேரும், கிராமங்களில் 62% பேரும், சிறுநகரங்களில் 59% பேரும், சொந்த ஊரில் கூட வேலை கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளனர். இதில் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் வேலை கிடைப்பதில்லை என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, உயர்சாதி இந்துகளில் 17% பேர் வேலை எளிதாக கிடைப்பதாகவும், 57% பேர் வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 19% பேர் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர். ஒபிசி இந்துக்களில் 12% பேர் வேலை எளிதாக கிடைப்பதாகவும், 63% வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 17% எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர், மேலும், எஸ்சி பிரிவினரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 12% வேலை எளிதாக கிடைப்பதாகவும்,63% பேர் வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 17% பேர் மாற்றமில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
எஸ்டி பிரிவினரிடம் நடத்த கருத்துக் கணிப்பில் 9% பேர் வேலை எளிதாக கிடைப்பதாகவும்,59% பேர் வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 25% பேர் மாற்றமில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களிடம் நடத்தப்பட்டதில், 6% பேர் வேலை எளிதாக கிடைப்பதாகவும்,67% வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 18% பேர் மாற்றமில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளனர்.மற்றவர்களிடம் நடத்தப்பட்டதில் 9% வேலை எளிதாக கிடைப்பதாகவும், 62% வேலை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும், 20% மாற்றமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
* அதே போல் விலைவாசி உயர்வு பற்றிய கருத்துக்கணிப்பில் 71% பேர் விலைவாசி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். 76% ஏழைகளும், 66% நடுத்தர குடும்பத்தினரும், 68% வசதி படைத்தவர்களும் விலைவாசி உயர்ந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.கிராமங்களில் 72% பேரும், சிறுநகரங்களில் 69% பேரும், நகரங்களில் 66% பேரும் வேதனை தெரிவித்துள்ளனர்.அது போல் 71% பேர் விலைவாசி உயர்வு தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வேலை வாய்ப்பு குறைவதற்கு எந்த அரசு காரணம் என்ற கேள்விக்கு 21% பேர் ஒன்றிய அரசு தான் காரணம் எனவும் 17% மாநில அரசு தான் காரணம் எனவும், 57% இருவரும் தான் காரணம் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பை இந்த அமைப்பானது 19 மாநிலங்களில் 10,019 பேரிடம் எடுக்கப்பட்டது. மேலும்,55% பேர் கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும்,ஊழலுக்காக 25% பேர் ஒன்றிய அரசையும், 16% பேர் மாநில அரசையும் குறை கூறியுள்ளனர். வாங்கும் ஊதியத்தில் 36% பேர் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ஆனால் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
* பழிவாங்க பயன்படும் ஈடி, சிபிஐ, ஐடி
சிபிஐ, ஈடி, ஐடி உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகள் பாஜவின் ஏவலாளிகளாக மாறி, அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தப்படுவதாக பாஜவுக்கு வாக்களிக்காதவர்களில் 46 சதவீதம் பேர் கருதுகின்றனர். பாஜவுக்கு வாக்களிப்பவர்களில் 21 சதவீதம் பேரும் அதே கருத்தை தெரிவித்துள்ளனர்.
* இந்தியா இந்து நாடல்ல அனைத்து மதத்தினருக்கும் சொந்தம்
கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 79 சதவீதம் பேர் இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமான நாடல்ல, அனைத்து மதத்தினருக்கு பொதுவானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி கருத்து கூறியவர்களில், நகர்புறங்களை சேர்ந்தவர்கள் 85 சதவீதம் பேர், படித்தவர்கள் 83 சதவீதம் பேர், பள்ளிக் கூடம் கூட போகாதவர்கள் 72 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 10 சதவீதம் பேர் கருத்து சொல்ல மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் 11 சதவீதம் பேர் இந்தியா இந்து நாடு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
* வாஷிங்மெஷின் கட்சியானதற்கு எதிர்ப்பு
ஈடி, சிபிஐ, ஐடி ரெய்டு அடித்து மாற்று கட்சியினரை பாஜவில் சேர்ப்பதோடு, பாஜ வாஷிங் மெஷினால் அவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று சான்றிதழ் தரப்படுவது குறித்து கருத்துக் கணிப்பில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பாஜ ஆதரவாளர்களில் 45 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்களை பொருத்தவரை, ஒன்றிய விசாரணை அமைப்புகளிடம் இருந்து தப்பிக்கவே எதிர்க்கட்சியினர் பாஜவில் சேருவதாக 46 சதவீதம் பேர் கருதுகின்றனர்.
* இவிஎம் தில்லுமுல்லு 56% பேர் அச்சம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்(இவிஎம்) பாஜ தில்லுமுல்லு செய்ய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.
* தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை போச்சு
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக பலரும் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ல் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தேர்தல் ஆணையம் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாக 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். ஆனால், இப்போது 28 சதவீதம் பேர் மட்டுமே மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தேர்தல் ஆணையம் ஓரளவு பரவாயில்லை என்று 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
* ஜி20 மாநாடா? அப்படின்னா?
ஜி20 உச்சிமாநாட்டை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் நடத்தியது. மோடியை உலகத் தலைவராக காண்பிக்க மொத்தம் ரூ.4100 கோடி செலவில் நாடு முழுவதும் 60 நகரங்களில் 200 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த உச்சி மாநாட்டால் பாஜவுக்கு ஒத்த ஓட்டு கூட அதிகமாக கிடைக்காது என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 63% பேர் ஜி20 உச்சி மாநாடுன்னா என்ன? அது இந்தியாவில் நடந்ததா? என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர். 37% பேர் மட்டுமே உச்சி மாநாடு நடந்தது தெரியும் என்று கூறினர்.
The post வேலை கிடைக்காம தவிக்கிறோம்: மோடி ஆட்சியில ஊழல் அதிகம் விலைவாசி உயர்வை தாங்க முடியல; கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் அதிருப்தி appeared first on Dinakaran.