×

மேலேவௌி தோட்டத்திற்கு பாதை வசதியில்லை 60 ஆண்டுகளாக வயல்வரப்புகளில் அவதி

*கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் : ‘60 ஆண்டுகளாக பாதை வசதியின்றி தனியார் வயல்வரப்புகளில் கல்வி, வேலைவாய்ப்புக்கு அவதிப்படும் நிலையை மாற்றக்கோரி மேலேவெளி தோட்டம் கிராம மக்கள் பள்ளி மாணவர்களுடன் தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.மனு விவரம்: எங்கள் கிராமத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். 2-வது வார்டைச் சேர்ந்த எங்கள் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாகவே நடைப்பாதை இல்லாமல் வரப்பிலும், வயலிலும் நடந்து செல்கிறோம். மேலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

கிராமவாசிகள் வேலைக்கு செல்ல முடியாமலும், இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்லவும், அவசர சேவையான தீ தடுப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரமுடியாததால் அவசர காலங்களில் மிகுந்த அவதியடைகிறோம். குழந்தைகள் செல்ல பள்ளிக்குச் செல்ல பாதை இல்லாமல் பல ஆண்டுகளாக சிரமமடைகின்றனர். மேலும், நாங்கள் 60 ஆண்டுகளாக பயன்படுத்திய நடைப்பாதை தனிநபருக்குச் சொந்தமானதால் பாதை அமைக்க முடியாத நிலை உள்ளதாக, 2-வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், நில உரிமையாளர் நடைப்பாதையை முள்ளு வேலியை வைத்து மறைத்தும் வருகிறார். எனவே, எங்கள் ஊர் பொது மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசியத் தேவைக்கு மற்ற கிராமம், நகரத்துக்குச் செல்லும் வகையில் பாதை அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார்டு கவுன்சிலருக்கு எச்சரிக்கை

மேலவெளி தோட்டம் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஐயப்பன் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி சீருடையில் மாணவர்களுடன் வந்ததைப் பார்த்த கலெக்டர் கோபமடைந்தார். மாணவர்களை அழைத்துவந்த வார்டு கவுன்சிலரைப் பார்த்து, பள்ளி நேரத்தில் மாணவர்களின் படிப்பைக் கெடுக்கும் விதமாக அழைத்து வந்தது சட்டப்படிக் குற்றம். முதலில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பிறகு வந்து மனு கொடுங்கள். மாணவர்களை அழைத்து வந்ததற்காக உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதேபோல், மீண்டும் செய்தால் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, மாணவர்களை பெற்றோர் உடனே பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

The post மேலேவௌி தோட்டத்திற்கு பாதை வசதியில்லை 60 ஆண்டுகளாக வயல்வரப்புகளில் அவதி appeared first on Dinakaran.

Tags : Melewawi ,Collector ,Thanjavur ,Maleveli Estate ,Priyanka Pankajat ,Dinakaran ,
× RELATED மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீல்...