×

என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னை: என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் என்.எல்.சி நிறுவனம் அத்துமீறக்கூடாது; கடலூர் மாவட்டத்தை சிங்கூர், நந்திகிராமமாக மாற்ற முயல வேண்டாம். கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் உள்ள வேளாண் விளைநிலங்களை சமன்படுத்தும் பணியிலும், சாலை அமைக்கும் பணியிலும் அத்துமீறி ஈடுபட்ட என்.எல்.சி அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, விரட்டியடித்துள்ளனர்.

என். எல்.சி நிறுவனத்தின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும். என்.எல்.சி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்த வளையமாதேவி மற்றும் அதையொட்டிய பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் நிலங்களை பறிக்க என்.எல்.சியும், மாவட்ட நிர்வாகமும் முயல்வதை அனுமதிக்க முடியாது. மக்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பது தான் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பணியாகும்.

ஆனால், கடலூர் மாவட்ட ஆட்சியரோ மக்களின் நலன்களை புறக்கணித்து விட்டு, என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தியே தீருவோம் என்று மாவட்ட ஆட்சியர் இன்று சூளுரைக்கிறார் என்றால் அவர் யாருக்காக வேலை செய்கிறார்? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்ட மக்களின் பொறுமையை பலவீனமாக கருதிவிடக் கூடாது. பொதுமக்கள் மீது தொடர்ந்து அத்துமீறலை கட்டவிழ்த்து விட்டு, நெருக்கடி கொடுத்தால் கடலூர் மாவட்ட சிங்கூராகவும், நந்தி கிராமமாகவும் மாறிவிடக்கூடும். அத்தகைய நிலையை ஏற்படுத்தி விடாமல் பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைக் காக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post என்எல்சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BAMA ,President ,Anbumani Ramadoss ,CHENNAI ,Tamil Nadu.… ,NLC ,Dinakaran ,
× RELATED மருத்துவர்களுக்கு இணையாக கால்நடை...