வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி சூதாட்டம்

கோவை, நவ.22: கோவை கந்தே கவுண்டன் சாவடி அருகேயுள்ள மாசித்தி கவுண்டன்பதியில் விவசாய தோட்டத்தில் தினமும் சீட்டாட்டம் நடப்பதாக தகவல் வந்தது. கோவை மாவட்ட எஸ்பி. அருளரசு உத்தரவின் பேரில், கந்தே கவுண்டன் சாவடி போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீர் ரெய்டு நடத்தினர். எமர்ஜென்சி லைட் வைத்து கூட்டம் கூட்டமாக அமர்ந்து வெட்ட வெளியில் சீட்டாட்டம் நடத்தப்பட்டது தெரியவந்தது.

போலீசார் சீட்டாட்ட கும்பலை சேர்ந்த 28 பேரை சுற்றி வளைத்தனர். இவர்களிடம் 2.28 லட்ச ரூபாய் இருந்தது. போலீசார் 28 பேர் மீது சூதாட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுக்கரை, நாச்சிபாளையம், எட்டிமடை, பாலத்துறை, வாளையார் உட்பட பல்வேறு பகுதியில் வசிப்பதும், பல்வேறு பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருவதும், சிலர் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘‘கூலி வேலையில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை. வியாபாரமும் முடங்கி போய் விட்டது. இதனால் தமிழக கேரள எல்லையில் உள்ள இந்த விவசாய  தோட்டத்தை தேர்வு செய்தோம். கேரள போலீசார் வந்தால் தமிழக எல்லைக்குள் போய் விடுவோம். தமிழக போலீசார் வந்தால் கேரள எல்லைக்குள் சென்று தப்பி விடுவோம். தினமும் விடிய விடிய பல்வேறு செட் சீட்டாட்டம் நடத்துவோம். ஜெயித்தாலும், தோற்றாலும் விடியும் வரை சீட்டாட்டத்தில் ெதாடர்ந்து பங்கேற்போம்.

100 ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை வைத்து சீட்டாட்டம் நடத்துவோம். எங்களை ஒருங்கிணைக்க வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. எந்த நேரத்தில் எங்கே சீட்டாட்டம் நடத்தப்படும் என தகவல் தெரிவிப்பார்கள். இந்த சீட்டாட்டத்தில் சிலர் பெரிய அளவில் பணம் இழந்திருக்கிறார்கள். சிலர் அதிகளவு சம்பாதித்திருக்கிறார்கள். தோற்ற சிலர் ஜெயித்தவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி சீட்டாட்டத்தில் பங்கேற்பதும் நடக்கிறது. கொரோனா நோய் பரவல் காலத்தில் இருந்து சீட்டாட்டம் அதிகமாகி விட்டது. சீட்டாட்டத்தில் அதிக பணம் கிடைப்பதில் இந்த சூதாட்டத்தில் இருந்து எங்களால் விலக முடியவில்லை’’ என தெரிவித்தனர்.

Related Stories:

>