×

கோவை தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

 

கோவை, ஏப்.24: கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அம்மனுக்கு அணிவித்த புடவைகள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு புடவைகளை ஏலத்தில் எடுத்தனர்.

மேலும், மாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில், கோவில் செயல் அலுவலர் பேபிஷாலினி, அறங்காவலர் குழு தலைவர் நாகலட்சுமி, கலைமணி, மனோஜ்குமார், ஸ்ரீவத்சன், பத்ரசாமி மற்றும் தலைமை பூசாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதைத்தொடர்ந்து இன்று காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. கோனியம்மன் கோயிலில் இருந்து புறப்படும் ஊர்வலம் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி வீதி, பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு, அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, காலீஸ்வரா மில் ரோடு, சோமசுந்தரா மில் ரோடு வழியாக அனுப்பர்பாளையம், டாக்டர் நஞ்சப்பா ரோடு, டிஎன்எஸ்டி டெப்போ, ஜிடி டிரைவிங் பள்ளி வழியாக கோயிலை அடைகிறது. இதற்காக நகரில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post கோவை தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Coimbatore Tandumariamman Temple Painting Festival ,Coimbatore ,Tandumariamman Temple Chitrai Festival ,Uppilipalayam ,Coimbatore-Avinasi Road ,Amman ,Thiruveedi Ula ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...