தொடர் விலை வீழ்ச்சி மார்க்கெட்டுக்கு மஞ்சள் வரத்து சரிவு

ஈரோடு, நவ. 21: மஞ்சள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், விற்பனைக்கு வரும்  மஞ்சளின் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை  ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு  மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய 4  இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம்  மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும்  விற்பனைக்காக மஞ்சள் கொண்டு வருகின்றனர். விற்பனை செய்யப்படும் மஞ்சள் வெளி  மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு  மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனையானது. பின்னர் மஞ்சளின்  விலை மெல்ல குறைந்து கொண்டே வந்தது. தற்போது ஒரு குவிண்டால் அதிகபட்சமாக  ரூ.6 ஆயிரத்துக்கும் குறைவாகவே விற்பனையாகி வருகின்றது. தொடர் விலை  வீழ்ச்சியின் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு வரும் மஞ்சளின்  வரத்தும் குறையத்தொடங்கி உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு கடந்த 17ம்  தேதி மஞ்சள் மார்க்கெட் நடைபெற்றது. ஆனால் விலை வீழ்ச்சியால், விவசாயிகள்  மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வராததால், நேற்று முன்தினம் வரை ஏலம் ஏதும்  நடைபெறவில்லை. இதனால் மஞ்சள் கொள்முதல் செய்வதற்காக வந்திருந்த வியாபாரிகள்  மஞ்சள் கொள்முதல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.  இந்நிலையில் நேற்று ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள்  மற்றும் ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் மட்டுமே மஞ்சள் ஏலம் நடந்தது. கோபி  வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் மஞ்சளை  விற்பனைக்கு கொண்டு வராததால், 3வது நாளாக நேற்றும் மஞ்சள் ஏலம்  நடைபெறவில்லை. ஈரோடு செம்மாம்பாளையத்தில் நேற்று நடந்த மார்க்கெட்டில் 121  மூட்டை மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதில் 24 மூட்டைகள்  மட்டுமே விற்பனையானது. ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.5009 முதல் ரூ.5  ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.4 ஆயிரத்து 721 முதல் ரூ.5  ஆயிரத்து 729 வரை ஏலம் போனது.

இதேபோல் ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் நடந்த  ஏலத்துக்கு 344 மூட்டை மஞ்சள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.  ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 52 முதல் ரூ.5 ஆயிரத்து 999  வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.4 ஆயிரத்து 816 முதல் ரூ.5 ஆயிரத்து 809  வரையும் விலைபோனது. மஞ்சளுக்கான உள்நாட்டு தேவை குறைவாக உள்ளதாலும்,  வெளிநாடுகளுக்கு 30 சதவீத அளவு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதால், மஞ்சளின்  விலை உயராமல் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இலங்கையில்  மஞ்சள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டிற்கு ஏற்றுமதி  செய்வது பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>