×

மூடப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் இயக்க கோரி சிஐடியு., சாலை மறியல்

ஊட்டி, நவ. 13:இரு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையை மீண்டும் இயக்க கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாண்டிநல்லா பகுதியில் விலங்குகளின் எலும்புகளிலிருந்து கால்சியம் பிரித்தெடுக்கும் ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இத்தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால், இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையை இயக்க  மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினரிடம் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், தொழிற்சாலையை மீண்டும் இயக்க வேண்டும்.

அதுவரை ஊழியர்களுக்கு  முழு சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சிஐடியு., ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரமேஷ், ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மூர்த்தி, முன்னாள் பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நகராட்சி ஊழியர் சங்கத்தின் தலைவர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : CITU. ,reopening ,Road ,factory ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்