×

சட்டநாதபுரம் ரவுண்டானாவில் உயர் கோபுர மின்விளக்கு சீரமைப்பு

சீர்காழி, நவ. 12: சட்டநாதபுரம் ரவுண்டானாவில் பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள ரவுண்டானா நான்கு வழிச்சாலைகளை பிரிக்கும் ஓர் முக்கியமான மையமாகும். கிழக்கே பூம்புகார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. மேற்கே சென்னை செல்லும் புறவழிச்சாலையும், தெற்கே மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி செல்லும் நெடுஞ்சாலையும் உள்ளது. வடக்கே சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையும் இந்த ரவுண்டானாவை மையமாக வைத்து பிரிந்து செல்கின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இதன் வழியாக சென்று வருகின்றன. சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும், வெளியூர் பேருந்துகளும் நின்று செல்லும் பேருந்து நிறுத்தங்களும் இங்குள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது.

தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியூர்களில் பணிபுரியும் பலர் ஊருக்கு திரும்பும் சூழலில் ரவுண்டானா இருளில் மூழ்கி கிடப்பது பலவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற காரணமாகி விடுமோ என அச்சம் எழுந்துள்ளது.
இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நாகை கலெக்டர் பிரவீன் பி நாயர், கூடுதல் கலெக்டர் பிரசாந்த் உத்தரவின்பேரில் சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன், விஜயலட்சுமி ஆகியோர் சட்டநாதபுரம் ஊராட்சி, நிர்வாகம் மூலம் உயர் கோபுர மின் விளக்கை சரி செய்யும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நாகை கலெக்டர், கூடுதல் கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்துள்ளனர்.

Tags : Sattanathapuram Roundabout ,
× RELATED திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் மக்கள்...