×

செல்போன் கேபிள் பொருத்தும் போது விபத்து மின் சாதன பொருட்கள் எரிந்து சேதம்

ஈரோடு, நவ. 9: ஈரோட்டில் தனியார் செல்போன் கேபிள் இணைப்பு கொடுக்கும்போது, உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் மின் சாதன பொருட்கள் நாசமாகின. ஈரோடு சம்பத் நகர் அருகே உள்ள அருணாச்சலம் வீதியில் நேற்று முன்தினம் தனியார் செல்போன் நிறுவனத்தின் அதிவேக இணையதள வசதிக்காக வீடுகளுக்கு பைபர் கேபிள் பொருத்தும் நடந்து வந்தது. இந்த பணியில், பவானியை சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (23) என்பவர் ஈடுபட்டு வந்தார். இதில், அருணாச்சலம் வீதியில் வசிக்கும் வழக்கறிஞர் துரைசாமி என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இணைப்பு கொடுப்பதற்காக, பைபர் கேபிளை அங்கிருந்து தூக்கி வீசியுள்ளார். அப்போது, அந்த கேபிள் சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் மோதி நின்றதால், மோகன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில், காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், மின் கம்பியில் பைபர் மோதியதில், அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் துரைசாமி (60) வீட்டில் இருந்த மின் மீட்டர் பெட்டியும், சோலார் பேனலும் வெடித்து சிதறியது. பிரிட்ஜ், டிவி, பேன் உள்ளிட்டவை நாசமாகின. இதேபோல், ஜெயகிருஷ்ணன்(40), அவரது பக்கத்து வீட்டிலும் மின் மீட்டர் பாக்ஸ் வெடித்து, அதற்கு கீழ் நிறுத்தப்பட்டிருந்த 2 சைக்கிள், துணிகள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மின்வாரியத்தினரும் அப்பகுதியில் உடனடியாக மின் இணைப்பினை துண்டித்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு