×

கோடை விடுமுறையில் குவியும் சுற்றுலா பயணிகள் ஈரோடு போலீசார் 68 பேருக்கு ஊட்டியில் பாதுகாப்பு பணி

 

ஈரோடு, மே 4: கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் ஈரோட்டில் இருந்து 68 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை காரணமாக மலை வாசஸ்தலங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தொடங்கி உள்ளனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தின் அண்டை மாவட்டமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும், இன்று முதல் 24 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதால் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அருகில் உள்ள மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து 68 போலீசார் நேற்று ஊட்டி புறப்பட்டு சென்றனர். இதில், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 17 எஸ்ஐக்கள் மற்றும் 49 போலீசார் என மொத்தம் 68 பேர் ஊட்டி சென்றுள்ளனர். அவர்கள் அங்கு ஒரு வாரம் பணியாற்றி திரும்பிய பின், மற்றொரு அணியாக 68 பேர் மீண்டும் ஊட்டி அனுப்பி வைக்கப்படுவர் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோடை விடுமுறையில் குவியும் சுற்றுலா பயணிகள் ஈரோடு போலீசார் 68 பேருக்கு ஊட்டியில் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Erode ,Ooty ,Erode Police ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...