×

அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்ககோரி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

அரியலூர், நவ. 6: அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்ககோரி ஆனந்தவாடி சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் 1982ம் ஆண்டு 161 விவசாயிகளிடம் 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2,500 கொடுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை நிலம் கொடுத்த ஆனந்தவாடி விவசாயிகளுக்கு வேலை வழங்கவில்லை.
இதையடுத்து தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரியலூர் அரசு சிமென்ட் ஆலையில் விவசாயிகளுக்கு தகுதியுள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென ஆனந்தவாடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் நடந்து கொண்டிருந்த வேலையை தடுத்து நிறுத்தி வாகனத்தை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளியேற்றினர். பின்னர் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த ஜூன் மாதம் ஆலை நிர்வாகம் அழைத்து நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தி கூறியது. இதையடுத்து அப்போது நடந்த போராட்டங்கள் கைவிடப்பட்டது. ஆனால் இதுவரை வேலை வழங்கவில்லை. எனவே தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஆனந்தாவாடி கிராமத்தில் நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்காமல் வெளிமாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக குற்றம் சாட்டினர். இந்த தகவல் கிடைத்ததும் இரும்புலிக்குறிச்சி போலீசார் மற்றும் சிமென்ட ஆலை நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : limestone mine ,government cement plant ,land ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!