மின் வாரியத்தில் வடமாநில தொழிலாளர்களை நியமித்தால் போராட்டம்

திருப்பூர், நவ 3:  திருப்பூரில், மின் வாரியத்தில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தப்படுவதை நிறுத்தாவிட்டால் தொ.மு.ச. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொ.மு.ச. மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: மின் வாரியத்தில் தொடர்ந்து அனைத்து பணிகளையும் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் செய்து வருகிறார்கள். ஆனால் திருப்பூரில்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர் பணி வழங்காமல் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரும் அவினாசி கோட்ட செயற்பொறியாளரும் தன்னிச்சையாக செயல்பட்டு மின்வாரியத்திற்கு சம்பந்தமில்லாத 16 வயதுக்கு கீழே உள்ள வடமாநிலங்களை  சேர்ந்த தொழிலாளர்களை வைத்து திருப்பூர் பகுதியில் மின்வாரிய பணிகளை செய்கிறார்.இதனால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

திருப்பூர் மின் வாரியத்தில் 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கும்போது எந்த முன் அனுபவமும் இல்லாத வட மாநில தொழிலாளர்களுக்கு பணிகள் வழங்கப்படுகிறது. மேலும், திருப்பூர் மின்வாரியத்தில் கே 2 டெண்டரை சில குறிப்பிட்ட அதிகாரிகள் தங்களின் பினாமிகள் பெயரில் டெண்டர் எடுத்து அதில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளை போல் பயன்படுத்தி மின்வாரிய பணிகளை செய்து வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக இதையே நம்பியிருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக உள்ளது. தமிழக அரசு ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதை நிறுத்த வேண்டும். தமிழக அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்க வேண்டும். இது குறித்து மின் வாரியமும், தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>