×

காரைக்காலில் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் ஒத்திவைப்பு அதிகாரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

காரைக்கால், அக்.2: காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு, கடந்த 6 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். கர்நாடகா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வழங்குவது போல் புதுச்சேரி உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 தினங்களாக நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அலுவலகத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவர்களிடம் காரைக்கால் உள்ளாட்சி துறை துணை இயக்குனர் ரேவதி, பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் ஊதியத்திற்காக முதற்கட்டமாக இன்னும் இரண்டு தினங்களில் ரூ.10 லட்சத்திற்கான அரசாணை வெளியிடப்படும். நிதி நிலையின் அடிப்படையில் மேற்கொண்டு மானிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவேபோராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு புதுச்சேரி உள்ளாட்சித்துறை அரசு சார்பு செயலர் கிட்டி பலராம் தெரிவித்துள்ளார். எனவே போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ரேவதி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் தற்காலிகமாக தள்ளிவைத்து வரும் 5ம் தேதி முதல் (திங்கட்கிழமை) பணிக்கு திரும்புவதாக நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் இளங்கோ, செயலாளர் ஷண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Panchayat employees ,
× RELATED பஞ்சாயத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்