×

ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் சமூக விரோதிகளின் கூடாரமான தாய்மார்கள் பாலூட்டும் அறை

ஆண்டிபட்டி, மார்ச் 19: ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை செயல்படாமல் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் என்.எஸ்.கே கலைவாணர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் வழியாக தேனி, கம்பம், குமுளி, மதுரை, செங்கோட்டை, ராஜபாளையம், திருநெல்வேலி, திருச்செந்தூர் போன்ற பல்வேறு ஊர்களுக்கு இந்தப் பேருந்து நிலையம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

மேலும் பாலக்கோம்பை, அணைக்கரைபட்டி, தெப்பம்பட்டி, கணேசபுரம் உள்ளிட்ட கிராமபுற பகுதிகளுக்கும் இந்த பேருந்து நிலையத்தின் வழியாக பேருந்து செல்கின்றன. பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்தில் சென்று திரும்புகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பேருந்து நிலையத்தின் உள்ளே தமிழக அரசு தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. ஒரு வருடம் மட்டுமே செயல்பட்ட இந்த பாலூட்டும் அறை கடந்த 4 வருடங்களாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறது.

அறைகளின் கதவுகள் உடைந்தும், கண்ணாடிகள் உடைந்தும், மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானம் அருந்துவதற்கு பயன்படுத்தி சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டனர். எனவே ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tabernacle mothers nursery room ,bus stand ,Antipatti ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை