×

பாலக்காடு, ஆலத்தூர் (தனி) தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

பாலக்காடு, ஏப்.27: கேரள மாநிலத்தில் பாலக்காடு, ஆலத்தூர் (தனி) ஆகிய இருதொகுதிகள் உட்பட 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பாலக்காட்டில் கடுமையாக வெயில் அடிப்பதால் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு காலை 6 மணி முதலாக வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர். மேலும், கட்டுமானப் பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள், அன்றாட கூலியாட்கள் ஆகியோர் வெயிலுக்கு முன்பாக வந்து வாக்குகள் பதிவு செய்து சென்றனர். பாலக்காடு மாவட்டத்தில் மொத்தம் 2 தொகுதிகளிலுமாக 2 ஆயிரத்து 845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மருத்துவ வசதி, குடிநீர், கழிவறைகள், சாமியானா பந்தல் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தபட்டிருந்தன.

ஆண், பெண் இருபாலினருக்கும் தனித்தனி வரிசைகள் போலீசார் ஏற்படுத்தி வாக்குச்சாவடிக்குள் ஒவ்வொருவராக அனுப்பி விட்டவாறு இருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி, நோயாளிகள் வாக்கு செலுத்த வீல்சேர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முதியோர்களை போலீசார், என்சிசி என்எஸ்எஸ் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆகியோர் கைத்தாங்கலாக அழைத்து சென்று வாக்குச்சாவடிகளில் வாக்குகள் செலுத்த அனுமதி வழங்கினர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டிருந்தனர்.

The post பாலக்காடு, ஆலத்தூர் (தனி) தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad, Alathur ,Palakkad ,Alathur ,Kerala ,Palakat ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...