×

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் டோல்கேட்டில் கொரோனா விழிப்புணர்வு

தர்மபுரி, மார்ச் 19: சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் டோல்கேட்டில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பணிகள் நடந்தது. தர்மபுரி பேருந்து நிலையம், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி (டோல்கேட்) ஆகிய இடங்களில், கொரோனா வைரஸ் முன்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் நடந்தது. பின்னர், கலெக்டர் மலர்விழி பொதுமக்களிடையே பேசியதாவது: கொரோனா வைரஸ் நோய், பாதித்த நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. மேலு,ம் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கையாக தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரிக்க வேண்டும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.  இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும்.
வெளிநாடுகளுக்கு பயணம் செல்வதை தவிர்க்கலாம். சளி, இருமல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்கவேண்டும். சமீபத்தில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வந்தவர்கள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மருத்துவ நலப்பணிகள் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஸ்டீபன்ராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஜெமினி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) தேன்மொழி, நகராட்சி ஆணையர் சித்ரா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம், தொப்பூர் சுங்கச்சாவடியின் மேலாளர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

'கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு ஆய்வு'
தர்மபுரி பேருந்து நிலையம் மற்றும் குறிஞ்சிநகர் டோல்கேட் ஆகிய இடங்களில் பஸ்கள் மற்றும் இதர வாகனங்களில் வருகை தந்த பயணிகளிடம், கொரோனா வைரஸ் குறித்தும், கை கழுவும் முறை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்தும் கலெக்டர் கூறினார். மருந்துகள் தெளித்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். மேலும், பஸ்கள் மற்றும் வாகனங்களில்  மருந்துகள் தெளிக்கப்பட்டது. முன்னதாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதி, மருந்து, மாத்திரைகளின் இருப்பு உள்ளிட்டவற்றை மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கலெக்டர் மலர்விழி கேட்டறிந்தார்.

Tags : Salem- Bangalore National Highway ,
× RELATED கலப்பட ஜவ்வரிசி ஆலைகளுக்கு எதிராக...