×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள் 31ம் தேதி வரை மூடல்

தஞ்சை, மார்ச் 18: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டது. இது வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். மேலும் மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை (தொலைபேசி எண்- 1077) கலெக்டர் அலுவலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம். அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான மனோரா, கல்லணை, தஞ்சாவூர் தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், கலைக்கூடம், தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மணிகோபுரம், மராட்டா தர்பார் ஹால் ஆகியவை மூடப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்களான பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், சக்கரபாணி, சாரங்கபாணி கோயில் உள்ளிட்ட நவக்கிரக தலங்கள் மற்றும் பரிகார தலங்களில் பக்தர்கள் குறைந்த அளவிலேயே வர தொடங்கினர். அப்படி வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பொது சுகாதாரத்துறையினர் துண்டு அறிக்கை மூலம் வழங்கி வருகின்றனர்.

பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் நேற்று தஞ்சாவூர் அரண்மனை கலைக்கூடத்தை பார்வையிட இளைஞர்களும், பொதுமக்களும், ஒரு சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலைக்கூடம் மூடப்பட்டதால் ஏமாற்றத்தோடு திரும்பினர். மாவட்டத்தில் பரவலாக நேற்று முதல் சுற்றுலா பயணிகள் வருகை குறைய துவங்கியுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் கலைக்கூட காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் கலைக்கூடமும் ஒன்று, இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலைக்கூடத்தில் உள்ள அரிய கற்சிலைகளை பார்வையிட்டும், ஆயுத கோபுரத்தில் ஏறி தஞ்சாவூரின் அழகையும் பார்த்து ரசிப்பர்.

கடந்த 14ம் தேதி 79 வெளிநாட்டு பயணிகள் உள்பட 4,743 பேர், 15ம் தேதி 57 வெளிநாட்டு பயணிகள் உள்பட 3,075 பேர், 16ம் தேதி 15 வெளிநாட்டு பயணிகள் உள்பட 450 பேரும் வந்துள்ளனர். கோவிட்-19 வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாக உத்தரவின்படி வரும் 31ம் தேதி வரை மூடப்படுகிறது. ஆனால் பணியாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார். தஞ்சை பெரிய கோயிலில் நேற்று முதல் பக்தர்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் முகப்பில் உள்ள கேரளாந்தகன் வாயிலில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிவதற்கான தெர்மல் ஸ்கேனர் கருவி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்களுக்கு சோதனை செய்யும் பணியை கலெக்டர் கோவிந்தராவ் துவக்கி வைத்தார்.

இதைதொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் தொடர்புடைய பக்தர்களை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைக்குமாறு அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் கோவிந்தராவ் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்துக்குள் வரும் அனைத்து மக்களுக்கும் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றார்.

Tags :
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...