×

உத்தமபாளையம் பகுதியில் விடுதிகள் மூடல் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மாணவர்களின் உடல் நலன் கேள்விக்குறி

உத்தமபாளையம், மார்ச் 18: கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், உத்தமபாளையம் பகுதியில் தங்கி படித்த இடுக்கி மாவட்ட தமிழ் மாணவர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதனால், அவர்களின் உடல்நலன் கேள்விக்குறியாகி உள்ளது. உத்தமபாளயம அருகே ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மாணவ, மாணவியர் தங்கி படிக்கும் விடுதிகள் உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு 10, 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் நடைபெறுவதால், மற்ற வகுப்பு மாணவ, மாணவியருக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், விடுதிகளில் தங்கி படிக்க கூடிய மாணவ, மாணவியர் சொந்த ஊர்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக ராயப்பன்பட்டி பகுதியில் அதிகளவில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த தமிழக தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு இன்னும் தேர்வுகள் ஆரம்பம் ஆகவில்லை. 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்ககூடியவர்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்.கே.ஜி. மற்றும் 1ம் வகுப்பு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

கொரோனா தடுப்பாக இருக்குமா?
உத்தமபாளையம் பகுதி பள்ளிகளில் இடுக்கி மாவட்டத்தில் வேலை பார்க்கும் தமிழர்களின் பிள்ளைகள்தான் அதிகமாக படிக்கின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இங்கு படிக்கின்ற இடுக்கி மாவட்ட மாணவ, மாணவியரை அங்கு அனுப்பினால் இது கொரானா தடுப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நடைபெறும்போது  கேரளாவிற்கு சென்ற மாணவர்கள், மீண்டும் பள்ளிகளுக்கு திரும்புவர். இது நோய் தடுப்பாக இருக்குமா, அல்லது நோய் பாதிப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவர்கள் நலனை முன்கூட்டியே சிந்தித்து தேனி முதன்மை கல்வி அதிகாரியும், உத்தமபாளையம் மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரிகள் கலெக்டரிடம் விளக்கி இருந்தால் விடுதிகளை மூடாத நிலை உருவாகி இருக்கும். ஆனால், மாணவர்களை பற்றி சிந்திக்காமல் அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். மாற்று வழிகளை சிந்திக்காத கல்வித்துறையால் கேரளா சென்றுள்ள தமிழ் மாணவர்களின் உடல் நலன் குறித்து கேள்வி எழுந்துள்ளது.

Tags : Closure ,hotels ,Uthamapalayam ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்