×

அன்றாடம் அதிகரிக்கும் தங்கத்தின் விலை கூலி குறைப்பால் தங்க நகை தொழிலாளர்கள் பாதிப்பு

கோவை,மார்ச்.18: கூலி குறைவால் பாதிப்படையும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வை தங்க நகை உற்பத்தியாளர் சங்கம் மேற்கொள்ளவேண்டும் என தங்க தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை தங்க நகை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு தங்க நகை தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் சந்திரன் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பாரம்பரிய தங்கநகை வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்த நாட்டின் வடிவமைப்பை கொடுத்தாலும் செய்து கொடுத்து வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக தங்க நகை விலை உயர உயர தங்க நகை தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் பாதிப்படைந்து வருகிறது.

தற்போது தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து வருவதால் கூலி சதவீதம் குறைந்து கொண்டே போகிறது. இது தங்கநகை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி ஏராளமான யூனிட்டுகள் தொழிற்சாலை அமைத்து மிக குறைந்த ஊதியத்தில் ஆட்களை வைத்து வேலை செய்கிறார்கள். சில தொழிற்சாலையில் கிராம் அடிப்படையில் கூலி கொடுக்கிறார்கள். அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்ச கூலி கூட கொடுக்காமல் 12 மணிநேரம் வேலை வாங்கப்படுகிறது. இதனால் நியாயமான கூலி கொடுக்கும் முதலாளிகள் தொழில செய்ய இயலாமல் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். தற்போது செயின், செட் ட்ராப்ஸ், மோதிரம் போன்றவற்றை தொழிற்சாலை யூனிட்டுகள் செய்வதால், பட்டறையில் ஆட்களை வைத்து வேலை செய்து கொண்டிருந்த நகைத்தொழிலாளர்களுக்கு கூலி கட்டுபடியாகாமல் வேறு வேலைகளுக்கு செல்கின்றனர்.

இதனால் சார்பு தொழிலாளர்களும், தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில் உள்ள  கம்பி இழுத்தல், டைஒர்க், மெருகுக்கடை, நகை பட்டை தீட்டுதல், டீக்கடை, சில்லரை வர்த்தகம் போன்ற சார்பு தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. வீட்டுவாடகை, குடிநீர், மின்கட்டணம், பட்டறைக்கு தேவையான மூலப்பொருட்கள் உயர்வு, எரிவாயு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பணித்திறனை மட்டும் நம்பி பட்டறை வைத்து வேலை செய்து கொண்டு இருக்கும் தொழிலாளர்களுக்கு தங்க விலை உயர்வை காரணம் காட்டி கூலி குறைத்தே வழங்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் கடன் தொல்லைக்கு ஆளாகி குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தங்கநகை தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்து தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட, நல்லதொரு தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

Tags : jewelery workers ,
× RELATED வாழ்வாதாரத்தை இழந்த நகை பட்டறை தொழிலாளிகள்