×

ஜவுளி நிறுவனத்தில் பொருட்கள் மீட்பு எதிர்ப்பு தெரிவித்து போலீசார் முன் பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு

பள்ளிபாளையம், மார்ச் 18: நீதிமன்றத்தின் உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்போடு ஜவுளி நிறுவனத்தின் பொருட்கள் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி நிறுவன உரிமையாளரின் உறவினர் போலீசார் முன்னிலையில் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையம் ஜீவா செட் அருகே இயங்கி வந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தை மணி(எ) பழனிசாமி, சிவன்டெக்ஸ் குமார் ஆகியோர் நடத்தி வந்தனர். பங்குதாரர்களுக்குள் பிரச்சினையால் நிறுவனத்தின் சரக்குகளை பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக பங்குதாரர்கள் இருவரும் மாறி மாறி புகார் கொடுத்தனர். இதில், இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஜவுளி நிறுவனம் பூட்டப்பட்டது. இதற்கிடையே ஜவுளிக்கான நூல்களை கடனுக்கு கொடுத்த 10 நூற்பாலை உரிமையாளர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேரில் முறையிட்டனர். ஜவுளி நிறுவனத்திற்கு நூல்கள் கொடுத்தது தொடர்பாக சுமார் ₹2.10 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நூற்பாலை உரிமையாளர்கள் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு சேர வேண்டிய கடன் தொகைக்கு ஜவுளி நிறுவனத்தில் உள்ள சொத்துக்களை கையகப்படுத்திட கோர்ட் உத்தரவிட்டது. நேற்று மதியம் 3 மணியளவில் காவல்துறை பாதுகாப்போடு பிரச்சினைக்குரிய டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து ஜவுளிகள், நூல்கள் போன்றவை மீட்கப்பட்டது. அப்போது, ஜவுளி நிறுவனத்தின் பங்குதாரர் சிவன்டெக்ஸ் குமார் உடனிருந்தார்.

மற்றொரு பங்குதாரர் மணி(எ) பழனிசாமி வரவில்லை. அவருக்கு பதிலாக அவரது அண்ணி லதா அங்கிருந்தார். அவர், ஜவுளி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பொருட்களை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது, திடீரென மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். போலீசார் முன்னிலையில் பெண் பூச்சி மருந்து குடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, லதாவை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்போடு ஜவுளி நிறுவனத்திலிருந்த சரக்குகள் லாரியில் ஏற்றி எடுத்துச்செல்லப்பட்டது.

Tags : textile company ,
× RELATED லிப்ட் கேட்பதுபோல் நடித்து...