×

லிப்ட் கேட்பதுபோல் நடித்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியரிடம் ரூ.12 ஆயிரம் வழிப்பறி

கரூர், ஆக. 17: கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் பைக்கில் சென்ற டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியரிடம், லிப்ட் கேட்பதுபோல் நிறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.12 ஆயிரம் பறித்து சென்ற நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர். அரியலூரை சேர்ந்தவர் ராஜபாண்டி (31). இவர், கரூரில் தங்கி, ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 9ம்தேதி இரவு 10 மணியளவில் பைக்கில் மதுரை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் சின்னாண்டாங்கோயிலை சேர்ந்த அருண் (22) என்ற வாலிபர், பைக்கில் வந்த ராஜபாண்டியிடம் லிப்ட் கேட்பது போல நடித்துள்ளார். இதனை நம்பிய ராஜபாண்டியும் பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, அவரிடம் வந்த அருண், மது அருந்த பணம் வேண்டும் என கேட்டு அவரை மிரட்டியுள்ளார். இதற்கு ராஜபாண்டி மறுத்துள்ளார்.

இதனால், அருண், சிக்னல் கொடுத்ததும், அருகில் மறைந்திருந்த சின்னாண்டாங்கோயிலை சேர்நத யுவராஜ் (22), கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த விமல் (24), திருநங்கை அபர்ணா ஆகிய மூன்று பேரும் வந்து, பைக் சாவியை எடுத்துக் கொண்டதோடு, கத்தியை காட்டி மிரட்டி, ராஜபாண்டியின் பையில் இருந்த ரூ. 12 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பரப்பி விடுவதாகவும் மிரடடி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜபாண்டி, கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, அருண், யுவராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கத்தி, ரூ. 2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய விமல், திருநங்கை அபர்ணாவை தேடி வருகின்றனர்.

The post லிப்ட் கேட்பதுபோல் நடித்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஊழியரிடம் ரூ.12 ஆயிரம் வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Karur ,Textile Institute ,Madurai ,Textile Company ,
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு