×

ஈரோடு வ.உ.சி பூங்காவில் சிதம்பரனார் சிலை வைக்க வலியுறுத்தல்

ஈரோடு, மார்ச் 18: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் ஈரோடு மாநகர்  மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடைவதற்காக பாடுபட்ட தலைவர்களில் முக்கிய தலைவராக வ.உ.சிதம்பரனார் திகழ்ந்து வருகிறார். பல இன்னல்களுக்கு ஆளான வ.உ. சிதம்பரனாருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரது தியாகத்தை நினைவுகூறும் வகையிலும் மக்கள் பார்க் என்று இருந்ததை ஈரோடு நகராட்சியால் வ.உ.சிதம்பரனார் பூங்கா என பெயர் வைக்கப்பட்டது.

இன்றைய மாணவர்கள, இளைஞர்கள் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை தெரிந்து கொள்ளும் வகையில் பூங்காவில் அவரது முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும். மேலும், கல்வெட்டில் அவரது வாழ்க்கை வரலாற்றை பதிக்க வேண்டும். ஈரோட்டை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவருமான தந்தை பெரியார் ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்த காலத்தில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தினார். இவரது தியாகத்தை போற்றும் வகையில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு தந்தை பெரியார் நாகம்மை திருமண மண்டபம் என பெயர் சூட்ட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ்ராஜப்பா,  மண்டல தலைவர்கள் அயூப்அலி, ஜாபர்சாகதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பாட்சா, முன்னாள் கவுன்சிலர்கள் விஜயபாஸ்கர், புனிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chidambaranaru ,Erode VUC Park ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...