×

சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை

புதுச்சேரி, மார்ச் 17: புதுவையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.7.50 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள என்ஆர்எச்எம் அரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த்குமார் பாண்டா, மாவட்ட ஆட்சியர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் ராமுலு, துணை இயக்குநர்கள் ரகுநாதன், முருகன், பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் வாசுதேவன், மக்கள் தொடர்பு அதிகாரி ரவி மற்றும் மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தற்போது மாஸ்க் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் 65 பைசாவுக்கு விற்க வேண்டிய மாஸ்க் ரூ.20 முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளை புதுவை எல்லையில் பரிசோதிப்பதற்கு ஒத்துழைப்பு தரவில்லை. மால், சினிமா தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி மால், தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுப்பதாகவும், வெண்டிலேட்டர், மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்குவதாகவும் அமைச்சர் மல்லாடி உறுதியளித்தார். கூட்டத்தின் முடிவில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 400 தனிமைப்படுத்தப்பட்ட படுகைகள் தயாராக உள்ளது. எதிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால், அதற்காக மருத்துவமனைகளை வலுப்படுத்துவதற்கும், தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கும் ரூ.130 கோடி தேவைப்படும்.

முதற்கட்டமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாமுக்கு 120 வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை மூலம் ரூ.6 கோடி, வருவாய்த்துறை மூலம் ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.7.50  கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மூலம் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன். அதேபோல், அவசர தேவைக்காக வருவாய்த்துறை நிதியை பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதால், இதுதொடர்பான கோப்பும் கவர்னருக்கு அனுப்பியுள்ளோம்.

புதுவையில் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5ம் வகுப்பு வரையும், மற்ற மாநிலங்களில் தேர்வு நடைபெறும் வகுப்புகளை தவிர்த்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையிலும் 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கும் விடுமுறை விடுவது நல்லது. இதுதொடர்பாக முதல்வரிடம் பேசுவேன்.

மற்ற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு பேருந்து, ரயில்களில் வரும் பயணிகள், ஓட்டல்களில் தங்கியுள்ளவர்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை 70 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை.  எனவே, புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவ கல்லூரிகளில் 23 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 1000 முதல் 1,200 பேர் புதுவையை சேர்ந்த மாணவர்கள். மற்றவர்கள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள். தற்போது மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் 65 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். என்னை பொறுத்தவரை இக்கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிப்பது நல்லது. இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வரும்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக ஒரு ஆம்புலன்ஸ் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அங்கு தனியாக 10 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். கொரோனா வைரஸ் தொடர்பாக நாளை (இன்று) மத்திய அரசுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. முதல்வர் உத்தரவுப்படி  அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. புதுவையில் இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

 பதுவைக்கு முதல்வர் வந்ததும் மால், தியேட்டர் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களை அனைத்து ஒத்துழைப்பு தருமாறு பேசுவார். நாளை (இன்று) முதல் ஆஷா பணியாளர்கள் ஒரு நாளைக்கு 100 குடும்பங்கள் வீதம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கையெழுத்து வாங்குவதுடன், அவர்களை சந்தித்த நேரம் உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும் என ஆஷா பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...