×

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க குறைதீர்க்கும் கூட்டத்தில் நடவடிக்கை

ஈரோடு,  மார்ச் 17:  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை அடிக்கடி கைகளை கழுவ அறிவுரை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நோய்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பாதுகாக்கவும், வீட்டிற்குள் நுழையும்போதும், கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம சார்பில அறிவுறுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்தனர். இதனால், நோய் பரவுவதை தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கைகளை கழுவும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குழாய் அமைக்கப்பட்டு கை கழுவ தண்ணீர் வழங்கப்பட்டது. இதை கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆகியோர் கைகளை சோப்பு போட்டு கழுவி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு லாரிகளில்  தண்ணீர் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது.மனு அளிக்க வந்த பொதுமக்களும், அலுவலர்களும் தங்களது கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே அலுவலகத்திற்கு சென்றனர். மேலும், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், 4 மண்டல அலுவலகங்களிலும் கைகளை கழுவதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய அலுவலகங்கள், ஓட்டல்கள், லாட்ஜ்கள், திருமண மண்டபங்களிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கைகளை கழுவ தண்ணீர் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆலோசனை: ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த முதல்வர், தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பேசுகையில்,`பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பறைகளுக்குள் வரும் போது கைகளை சோப் அல்லது ஹைண்ட் வாஷ் பயன்படுத்தி கழுவிய பின்னர் உள்ளே வர வேண்டும். அதேபோல், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது கைகளை சோப் போட்டு கழுவிய பின்னர் செல்ல அறிவுறுத்த வேண்டும். ஏனென்றால் பள்ளி, கல்லூரிகளில் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் எளிதாக பரவும். கைகளை முறையாக எப்படி கழுவுவது என மாணவ-மாணவிகளுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.இதைத்தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் சங்கர நாரயணன் பேசுகையில்,`தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும், அதில் இருந்து காத்துக்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். கைகளை சுத்தப்படுத்துவதும், முகக்கவசம் அணிவதும் நம்மிடம் இருந்து பிறருக்கு எவ்வித நோய் தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக தான். இன்னும் ஒரு மாதத்துக்கு அதாவது கொரோனாவை அழிக்கும் வரை நாம் கோயில் விழாக்களுக்கும், இதர நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. இது அவசியம் இல்லை. ஏனென்றால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து எப்படி நமக்கு நோய் தொற்று ஏற்படுகிறது என்பது தெரியாது. தும்மல், இருமல் வந்தால் கைகளை பயன்படுத்துவதை விட, முழங்கையை பயன்படுத்த வேண்டும். கோழி இறைச்சிகளில் இருந்து கொரோனா பரவுகிறது என்பது எந்த ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இருப்பினும், நன்றாக வேக வைத்த, சமைத்த உணவுகளை சாப்பிட்டால் எந்த வித நோய் தொற்றும் ஏற்படாது’ என்றார்.இந்த கூட்டத்தில் ஈரோடு தாசில்தார் பரிமளா, பள்ளி தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



Tags : grievance meeting ,spread ,
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...