×

பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவை ரத்து செய்ய கோரிக்கை

ஈரோடு, மார்ச் 17: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் இந்தியாவிலும், நம் அண்டை மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக, மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் கொரோனாவை உலக தொற்றுநோயாக அறிவித்துள்து. உலகளவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 30க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில், லட்சக்கணக்கானோர் வருவார்கள். ஆகையால், மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : temple festival ,Periyamariamman ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து