×

கொரோனா பீதி எதிரொலி வெளி மாநிலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது

நாமக்கல், மார்ச் 17: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளி மாநிலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாமக்கல்  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க  மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உரிய அனுமதி இன்றி அரசுத்துறை அலுவலர்கள்  கூட்டங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் வகையிலான  நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. அரசுத்துறை அலுவலகங்களில் கைகளை சுத்தமாக கழுவ  கிருமி நாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும். துறை ரீதியாக மற்ற மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிய அனுமதி பெறாமல் செல்லக்கூடாது. பிற  மாநிலங்கள் மற்றும் நாடுகளில் கொரோனா பாதிப்பு இருப்பதால், பள்ளி மற்றும்  கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ- மாணவியரை வெளி மாநிலங்களுக்கும்,  வெளி நாடுகளுக்கும் சுற்றுலா மற்றும் பிற காரணங்களாக அழைத்துச்  செல்லக்கூடாது.

பொதுமக்கள் அதிகம் வரும் அலுவலகங்களில் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் கைகளை சுத்தம் செய்ய தனி இடம் ஏற்படுத்த வேண்டும். ஓட்டல்  மற்றும் திரையரங்குகளுக்கு வரும் பொதுமக்கள் கைகளை கழுவ கிருமி நாசினி  திரவங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய  வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சுகாதாரத்துறை சட்டத்தின் அடிப்படையில்  நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிமித்தமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து  தொழிலாளர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வர வாய்ப்புள்ளதால், அவ்வாறு  சென்று வந்த தொழிலாளர்களின் விவரங்களை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்த்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, இணை இயக்குனர் சாந்தி, துணை  இயக்குனர்  சோமசுந்தரம்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,states ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...