×

24 மணி நேரமும் செயல்படும் “ஒன் ஸ்டாப் சென்டர்” பெண்களுக்கான சேவை மையத்தை கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 13: கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் பெண்களுக்கான சேவை மையமான “ஒன் ஸ்டாப் சென்டரை” கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் சமூக நலத்துறையின் சார்பில், அரசு தலைமை மருத்துவமனையில் பெண்களுக்கான மகளிர் சேவை மையமான ஒன் ஸ்டாப் சென்டரை துவக்கி வைத்ததை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இயங்கி வருகிறது. இம்மையத்தில் குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, உடல் மற்றும் மனநல பாதிப்புகள், குழந்தை திருமண தடுப்பு, பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுத்தல், ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பு குறித்து இம்மையத்தில் ஆலோசனை வழங்கி தீர்வு காணப்படுகிறது.

மேலும், பெண்களின் பாதுகாப்பிற்கான அவசர சேவை, மருத்துவ உதவி, காவல் துறையில் புகார் கொடுக்க பெண்களுக்கு உதவுதல், சட்ட உதவி மையம், ஆலோசனை, மனநல ஆலோசனை, தற்காலிக தங்கும் வசதி மற்றும் காணொளி வசதி உள்ளிட்ட வசதிகள் இம் மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மன நல மருத்துவர், வழக்கறிஞர், காவல்துறை அலுவலர், தொழில்நுட்ப பணியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரை கொண்டு முறையான ஆலோசனை வழங்கி தீர்வு காணப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தேசிய நலப்பணி 108ல் அவசர வாகனம் மூலம் காவல் துறையின் மூலம் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மீட்டெடுத்து தேவையான மருத்துவ உதவிகளை அளித்து, அருகில் உள்ள அரசு அல்லது தனியார் இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள். தேவையான மருத்துவ பரிசோதனை வழங்கப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் முதல் தகவல் அறிக்கை பதிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவில் ரீதியான ஆலோசனைகள் மற்றும் ஆதரவினை இம்மையத்தில் பெறலாம். தேசிய, மாநில மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் தேவையான சட்ட உதவிகள் இம்மையத்தில் அளிக்கப்படுகிறது. இதுவரை இம்மையத்தில் 14 நபர்களுக்கு ஆலோசனை வழங்கி தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக இம்மைய அவசர அழைப்பு எண். 181 என்ற எண்ணிற்கும், 044 2223355 ஆகிய எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, உடனடியாக சேவை பெறலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார். அப்போது, நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். பரமசிவம், ஆலோசகர் சர்வகலா மற்றும் குழுவினர், பிஆர்ஓ சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Collector ,Women ,One Stop Center ,Service Center ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...