×

ஓராண்டாக நிலவி வரும் சிக்கல் தீருமா? மார்ச் 18ல் பஸ் ஸ்டாண்ட் சுங்க ஏலம்

ஈரோடு, மார்ச் 13: ஜிஎஸ்டி பிரச்னையால் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூல் செய்வது தொடர்பான ஏலம் 14வது முறையாக வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் மத்திய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 800க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், மினி பஸ்கள், தொலைதூர பஸ்கள் வந்து செல்கிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் பஸ்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பந்தம் முடிந்த நிலையில் மீண்டும் ஏலம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சுங்க கட்டணம் பல ஆண்டுகளாக ஒரு பஸ்சுக்கு 15 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருவதால் கட்டுப்படியாகாமல் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. மேலும், மத்திய அரசு ஏலதாரர்களுக்கு ஏலம் எடுக்கும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரியும் செலுத்த வேண்டி உள்ளதால் போதிய வருவாய் கிடைக்காது என்பதால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் ஏலம் விடும்போதும் யாரும் ஏலம் எடுக்காததால் தொடர்ந்து ஏலம் விட அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது 14வது முறையாக வரும் 18ம்தேதி ஏலம் விட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது ஏலம் நடைபெறுமா? என அதிகாரிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால், ஏலத்தொகையை குறைக்கவும், ஜிஎஸ்டியை நீக்கவும், சுங்க கட்டணத்தை உயர்த்தி கொடுத்தால் மட்டுமே ஏலம் எடுக்க முடியும். இல்லையென்றால் மாநகராட்சி நிர்ணயித்துள்ள தொகைக்கு ஏலம் எடுத்தால் இழப்பு மட்டுமே ஏற்படும் என ஏலதாரர்ள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏலதாரர்கள் கூறியதாவது:ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வந்து செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக கடந்த முறை 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தாண்டும் இதே தொகையை நிர்ணயம் செய்து ஏலம் விட முடிவு செய்துள்ளனர். இதில், கலந்து கொள்ள டெபாசிட் தொகையாக 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏலத்தொகைக்கு ஜிஎஸ்டியும் சேர்த்து நிர்ணயித்துள்ளனர்.

அதன்படி, ஏலத்தொகைக்கு ஜிஎஸ்டியை செலுத்தும்போது அந்த தொகையை மீண்டும் எவ்வாறு பெறுவது என  தெரியவில்லை. பல ஆண்டுகளாக சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 15 ரூபாய் கட்டணம் மட்டுமே நிர்ணயித்துள்ளனர். ஏலத்தொகைக்கான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். சுங்க கட்டணத்தை உயர்த்த வேண்டும். அப்போதுதான், ஏலத்தில் கலந்து கொள்ள அதிக அளவில் வருவார்கள்.இதை குறைக்காததால்தான் கடந்த ஓராண்டாக யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Bus Stand Customs Auction ,
× RELATED பஸ் ஸ்டாண்ட் சுங்க கட்டண ஏலம் 13வது முறையாக ஒத்திவைப்பு