×

அயனாவரம், செம்பியம் பகுதிகளில் உரிமம் இல்லாத 22 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர், மார்ச் 13: அயனாவரம், கொளத்தூர் பெரவள்ளூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் தொழில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட 22 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் செல்பட்டு வருகின்றன. இவற்றில் பல கடைகள், வணிக நிறுவனங்கள் முறையாக தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாததால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, மண்டலம் வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை அயனாவரம், கொளத்தூர், பெரவள்ளூர், செம்பியம் ஆகிய பகுதிகளில் பல கடைகள் தொழில் உரிமம் இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தொழில் உரிமம் இன்றி நடத்தப்பட்ட கடைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் தொழில் உரிமம் பெறவில்லை எனில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்தும், கடை உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திருவிக நகர் மண்டல அதிகாரி நாராயணன், உதவி வருவாய் அலுவலர்கள் லட்சுமணகுமார், முருகேசன், உரிமம் ஆய்வாளர் யுவராஜ் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை சம்பவ இடங்களுக்கு சென்று, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, தொழில் உரிமமின்றி நடத்தப்பட்ட மளிகைக்கடை, துணிக்கடை, மருந்து கடை, டீக்கடை, துரித உணவகம் உள்ளிட்ட 22 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : shops ,Sembiyam ,Ayanavaram ,Corporation ,
× RELATED சமூக இடைவெளியை கடைபிடிக்காததால்...