×

சி.டி.எச் சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் சிரமம்

சென்னை: சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக சி.டி.எச் செல்கிறது. இந்தச் சாலை வழியாகத்தான் ஆவடி பகுதியில் உள்ள ராணுவத்துறை நிறுவனங்களான டேங்க் பேக்டரி, படைத்துறை உடை தொழிற்சாலை, போர்வூர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், என்ஜின் பேக்டரி, மத்திய வாகன கிடங்கு, விமான படை பயிற்சிமையம், மத்திய போலீஸ் பாதுகாப்புப்படை மற்றும் ரயில்வே பணிமனை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கிடங்கு ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும். மேலும், இச்சாலை வழியாகத்தான் சென்னை, புறநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொறியியல், கலை கல்லூரிக்கு சென்று வரவேண்டும். எனவே, சி.டி.எச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சி.டி.எச் சாலையில் காலை, மாலை நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து இருக்கும்.

ஏற்கனவே, இச்சாலை பாடி முதல் திருநின்றவூர் வரை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகலாகவே உள்ளது. இதற்கிடையில், பஸ் நிறுத்தங்கள், முக்கிய சந்திப்புகளில் ஷேர் ஆட்டோக்கள் ஆக்கிரமித்து, பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். மேலும், ஆவடி பகுதியில் சி.டி.எச் சாலை ஓரங்களில் அமரர் ஊர்திகளை நிறுத்தி வைத்து விடுகின்றனர். வணிக நிறுவனங்கள் முன் கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்து விட்டு வெகு நேரம் கழித்து தான் எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ஆவடி சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் இரும்பு பைப் தயாரிக்கும் நிறுவனம் முன்பு அடிக்கடி சரக்குவாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்திற்கு வரும் கண்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் சி.டி.எச் சாலையை ஆக்கிரமித்தபடி பல மணி நேரங்கள் நிற்கின்றன. இதனால் சி.டி.எச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

Tags : CDH Road ,Motorists ,
× RELATED கனகம்மாசத்திரம் சாலையில் வேரோடு...