×

சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடி அகற்றம்

புதுச்சேரி,  மார்ச் 12: இந்திரா காந்தி சிலை அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை  அதிகாரிகள் அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில்  சாலையோரம் பயன்பாடற்ற நிலையில் உள்ள கடைகள் மற்றும் வாகனங்களை அகற்றுமாறு  நகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று  பொதுப்பணித்துறை மற்றும் உழவர் கரை நகராட்சி அதிகாரிகள் இந்திராகாந்தி  சிலையில் இருந்து ராஜீவ்காந்தி சதுக்கம் வரையிலான பகுதிகளில் சாலையோரம்  இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். பயன்பாடற்ற நிலையில்  கிடந்த பெட்டிக் கடைகளை கிரேன் மூலம் அகற்றிய நகராட்சி அதிகாரிகள் அதை  தங்களது வாகனத்தில் ஏற்றி அலுவலகம் கொண்டு சென்றனர். இதேபோல் மற்ற  கடைகளையும் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை  மேற்கொண்டனர். இதையடுத்து அங்கு திரண்ட சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு  தெரிவித்தனர். தாங்களே கடைகளை அகற்றி விடுவதாகவும், 4 நாட்கள் மட்டும்  அவகாசம் தருமாறும் கேட்டனர். இருப்பினும் அதை ஏற்க மறுத்த அதிகாரிகள்  ஏற்கனவே 2 முறை அவகாசம் அளித்து சென்றதை நினைவுப்படுத்தி இதுவே கடைசி  எச்சரிக்கை எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் இந்திரா  காந்தி சிலை சந்திப்பில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...