×

பழமை மாறாமல் கட்டப்பட்டு வரும் புதுவை மேரி கட்டிடம் 3 மாதத்தில் திறக்கப்படும்

புதுச்சேரி, மார்ச் 12:   புதுச்சேரி கடற்கரை சாலையில் கட்டப்பட்டு வரும் மேரி கட்டிட பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
 புதுச்சேரியின் தனிப்பெருமையே இங்குள்ள பல பாரம்பரிய கட்டிடங்கள்தான். பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டுள்ள மிக பிரமாண்டமான கட்டிடங்கள் இன்றும் நகர பகுதியில் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. இவற்றை பார்க்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் புதுச்சேரிக்கு வந்து செல்கிறார்கள். இந்த வரிசையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் இருந்த மேரி பில்டிங்கும் மிக பழமையான கட்டிடமாக இருந்தது. பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தில் புதுச்சேரி நகராட்சி அலுவலகம் இயங்கி வந்தது. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு இந்த கட்டிடம் முற்றிலும் இடிந்து விழுந்தது.  புதுவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்த மேரி கட்டிடத்தை, அதே இடத்தில் பழமை மாறாமல் மீண்டும் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் அப்பகுதியில் புதுச்சேரி திட்ட அமலாக்க முகமை மூலம் ரூ.15.4 கோடியில் கட்டுமானப்பணி தொடங்கியது. சுமார் 690 சதுர மீட்டரில் பிரதான கட்டிடம், தரைத்தளம், முதல் தளம், ஆணையர் அறைகள், செயற்பொறியாளர் அறை, கருத்தரங்க கூடம், திருமண பதிவு அறை உள்ளிட்டவைகளை கட்ட தீர்மானிக்கப்பட்டது. மேரி கட்டிடத்தின் பழமை மாறாமல் கட்டுவதற்கு இன்டாக் அமைப்பு வழிகாட்டியது.

இதனால் பணிகள் தீவிரம் எடுத்தன. ஆனால் இந்த பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நீண்ட நாட்கள் நடந்து வருவதால், பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டது. இதை தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மேரி பில்டிங் கட்டுமானப்பணிகளை கலெக்டர் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பழைய மேரி கட்டிடத்தின் வடிவமைப்பு மாறாமல், பிரெஞ்சு முறைப்படி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டுள்ளது. விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Marie Building ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...