×

தர்மபுரியில் 4 அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருந்தும் மருத்துவர் பணியிடம் காலி

தர்மபுரி, மார்ச் 12: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 4 இடங்களில், டயாலிசிஸ் கருவிகள் இருந்தும், ஒரு சிறுநீராகவியல் சிறப்பு மருத்துவர் (நெப்ராலஜி) கூட அரசு மருத்துவமனையில் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 500 படுக்கை வசதிகளுடன் 5 மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 900க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் தினசரி சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் உள்ள இம்மருத்துவமனையில், ரத்த சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்), கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம் தலைமை மருத்துவமனை, பாலக்கோடு,  அரூர் அரசு மருத்துவமனைகளில் ரத்தம் சுத்திகரிப்பு பிரிவு (டயாலிசிஸ்)  இயங்கி வருகிறது.

தர்மபுரி அரசு மருத்துவமனையில், 5 டயாலிசிஸ் கருவிகள் உள்ளன. இக்கருவியின் மூலம் மனித உடலில் இருந்து ரத்தத்தை சுத்திகரித்து, மீண்டும் உடலுக்குள் செலுத்த குறைந்தபட்சம் 4 மணிநேரம் ஆகிறது. ஒருநாளைக்கு 15 பேருக்கு மட்டுமே டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இவ்வாறு டயாலிசிஸ் செய்யும் போது, அதனை கண்காணிக்க மருத்துவர்கள் உடனிருக்க வேண்டும். ஆனால், சிறுநீரக சிகிச்சை நிபுணர் (நெப்ராலஜிஸ்ட்) பணியிடம் காலியாக உள்ளது. இதனால், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், ‘டயாலிசிஸ் செய்யும் போது, நோயாளிக்கு  திடீரென மூச்சு நிற்கும். அப்போது அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க  வேண்டும். திடீரென வலிப்பு கூட வரும். அதுபோன்ற சமயங்களில் உடனிருந்து  சிகிச்சை அளிக்க மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர் ஒருவர் கூட அரசு மருத்துவமனைகளில் கிடையாது. இதனால், பெரும்பாலான நோயாளிகள் சேலம், பெங்களூரு, தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவு செய்து, டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலை உள்ளது,’ என்றனர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மேலும் 5 டயாலிசிஸ் கருவிகள் அமைக்கப்பட உள்ளது. விரைவில் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Tags : government hospitals ,doctor ,Dharmapuri ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்