×

வேலூர் வீட்டு வசதி வாரியம் சார்பில் காட்பாடியில் 70 லட்சத்தில் 41 பிளாட்கள் விரைவில் அமைக்க முடிவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்க ஏற்பாடு

வேலூர், மார்ச் 12:வேலூர் வீட்டு வசதி வாரியம் சார்பில் ₹70 லட்சத்தில் 41 பிளாட்கள் காட்பாடியில் விரைவில் அமைக்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் அமைக்கப்பட்டது. வீட்டு வசதி வாரியம் நகரின் உட்பகுதியிலும், காலியாக உள்ள நிலங்களை கையகப்படுத்தி சீரமைத்து அவைகளை வீட்டுமனைகளாகவும் குடியிருப்புகளை கட்டி மக்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடியாதவர்கள் காலிமனை வாங்க வசதியற்றவர்களும் பயனடையும் வகையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

அதன்படி மாவட்டங்கள் தோறும் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள், பிளாட்கள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வேலூர் மண்டல வீட்டு வசதி வாரிய அலுவலகம் மூலமாக வீட்டுமனைகள், வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் வீட்டு வசதி வாரியம் வேலூர் பிரிவு சார்பில், காட்பாடி தாராபடவேடு பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் ₹70 லட்சம் மதிப்பீட்டில் 41 வீட்டுமனைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தில் வீட்டுமனைகள் வழங்க, 21வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். வீட்டு வசதி வாரியத்தில் இதற்கு முன்னதாக வீடு, மனை பெற்றிருக்க கூடாது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும், ஆண்டு வருமானம் ₹25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று வீட்டு வசதிய வாரிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Vellore Housing Board ,Kattpadi ,
× RELATED வீட்டு மனைகள், வீடுகள்...