×

ஏரி தூர் வாரியபோது சிவலிங்கம் கண்டெடுப்பு * பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு * தொல்லியல் துறை ஆய்வுக்கு பரிந்துரை ஊசூர் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில்

அணைக்கட்டு, ஜூன்4: ஊசூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஏரி தூர்வாரும் போது கிடைத்த சிவலிங்கத்துக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். இந்த சிவலிங்கம் தொல்லியல் துறை ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட ஊசூர் அடுத்த சேக்கனூர் ஊராட்சி பெரிய ஏரியில், 100 நாள் வேலை திட்டத்தில் புதிய குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை நூறு நாள் வேலை தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் கடப்பாறை, மண்வெட்டி மூலம் மண்ணை வாரி எடுத்து குளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு பள்ளம் வெட்டும்போது ஒரு கல் தென்பட்டுள்ளது. அந்த கல்லை சுற்றி இருந்த மண்ணை அகற்றியபோது 2 அடி உயர சிவலிங்கம் இருப்பதை பார்த்து தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அங்கு சிவலிங்கம் இருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து சேக்கனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டனர். மேலும் சிவலிங்கத்திற்கு 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் மற்றும் திருநீறு பூசியும், ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி பூ வைத்து அலங்கரித்தும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சுரேஷ்பாபு, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, விஏஓ கிருஷ்ணவேணி, கிராம உதவியாளர் சச்சிதானந்தம், ஊராட்சி வார்டு உறுப்பினர் வேணுகோபால், ஊராட்சி செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் அங்கு வந்து தொழிலாளர்களிடம் சிவலிங்கம் கண்ெடடுக்கப்பட்டது குறித்து விவரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, அணைக்கட்டு தாசில்தார் வேண்டாவுக்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவின்பேரில் அந்த சிவலிங்கம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘குளம் வெட்டும் பணியின்போது கிடைத்த சிவலிங்கம் பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்த பின் இது பழங்கால சிவலிங்கம் தானா என்பது உறுதி செய்யப்படும்’ என்றனர்.

The post ஏரி தூர் வாரியபோது சிவலிங்கம் கண்டெடுப்பு * பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு * தொல்லியல் துறை ஆய்வுக்கு பரிந்துரை ஊசூர் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Shiv Lingam ,Eeri Dur Variyam ,Usur ,Damkatu ,Shiva lingam ,Vellore District, Usur ,Sekanur ,Lake Dur Wariya ,Puja ,
× RELATED ஊசூர் அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில்...