×

கொரோனா வைரஸ் அச்சத்தால் களையிழந்த ஹோலி கொண்டாட்டம்

புதுச்சேரி, மார்ச் 11:  புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எச்சரிக்கை காரணமாக இந்தாண்டு ஹோலி கொண்டாட்டம் களையிழந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஹோலி பண்டிகை நாடு முழுவதும் களைகட்டவில்லை. வடமாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கடந்த சில நாட்களாக இப்பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறையின் எச்சரிக்கையால் பெரும்பாலான இடங்களில் ஹோலி கொண்டாட்டங்கள் இந்தாண்டு தவிர்க்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியிலும் வடமாநில மாணவர்கள் அதிகம் பயிலும் ஜிப்மர் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஹோலி கொண்டாட மாநில அரசு தடைவிதித்திருந்தது. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு
பிறப்பித்தது.

 இதன் காரணமாக புதுச்சேரியில் ேஹாலி பண்டிகை களையிழந்தன. ஜிப்மரில் வழக்கமாக கும்பலாக திரண்டு பலவண்ண பொடிகளை முகம் மற்றும் உடலில் பூசி ஆரவாரம் செய்யும் வடமாநில மாணவ, மாணவிகள் இந்தாண்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களை தவிர்த்தனர். மேலும் பள்ளத்தில் தண்ணீரை நிரப்பி குதித்து சினிமா பாடல்களுக்கு நடனமாடி, தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடும் நிகழ்ச்சியும்  தவிர்க்கப்பட்டது. மாறாக ஒவ்வொருவரும் தனக்கு மிகவும் நெருக்கமான தோழியர், நண்பர் மீது மட்டும் வண்ண பொடிகளை பூசி தாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள்ளேயே ஹோலி கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டனர். பொதுவான கொண்டாட்டங்களை அடியோடு தவிர்த்து விட்டனர். இதேபோல் பல்கலைக்கழகத்திலும் வட மாநிலத்தவர்கள் ஹோலி கொண்டாட்டத்தை தவிர்த்தனர். இதனிடையே கொரோனா எச்சரிக்கை காரணமாக புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...