புதுக்கோட்டை, மார்ச்10: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 1ம்தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருவப்பூர் முத்துமாரிம்மனை திருவப்பூரில் உள்ள காட்டுமாரியம்மன் கோயிலில் எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்திக்கொண்டும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குழந்தைகளை கரும்பால் தொட்டில் கட்டி அதை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறுமிகள் கோலாட்டம் அடித்து கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாறுவேடம் அணிந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலுக்கு பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் விரதம் இருந்த பக்தர்களும் முத்துமாரியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு முத்துமாரியம்மன் கோயிலை சுற்றி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலை சுற்றி 40க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்தனர். கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்திக்கொண்டும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். குழந்தைகளை கரும்பால் தொட்டில் கட்டி அதை கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.