×

வைராபாளையம் குப்பைக்கிடங்கில் இருந்து 75 ஆயிரம் கியூபிக் குப்பைகள் அகற்றம்

ஈரோடு,  மார்ச் 10: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும்  வெண்டிபாளையம் மற்றும் வைராபாளையம் உரக்கிடங்குகளில் கொட்டி வைக்கப்பட்டது.  குறிப்பாக வைரபாளையம் குப்பைக்கிடங்கு காவிரி ஆற்றின் கரையோரத்தில்  அமைந்துள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் மலைபோல தேக்கி வைத்திருந்த குப்பைகள்  காவிரி ஆற்றில் கலந்து நீர் மாசடைந்து வந்தது. காவிரி ஆற்றை  சுத்தப்படுத்தும் வகையிலும், மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின்கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்யும் குப்பைகளை அகற்ற  முடிவு செய்யப்பட்டது. அதன்படி வைராபாளையம் குப்பைக்கிடங்கில் குவித்து  வைக்கப்பட்டிருந்த குப்பைகளை அரைத்து அதில் இருந்து உரம் தயாரிக்க ரூ.32  கோடி மதிப்பீட்டில் உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் குவித்து  வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

இதுவரை 75 ஆயிரம் கியூபிக்  மீட்டர் குப்பைகள் அகற்றி உரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 40 ஆயிரம்  கியூபிக் மீட்டர் குப்பைகளை அகற்ற வேண்டியது உள்ளது. இந்த குப்பைகள்  அனைத்தும் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கிறது. ஒருமாத காலத்திற்குள்  வைராபாளையத்தில் உள்ள அனைத்து குப்பைகளும் அகற்றப்படவுள்ளது.   மேலும்  வெண்டிபாளையம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை உரமாக்கும் பணியும்  துவங்கியுள்ளது. இந்த குப்பை கிடங்குகளில் மக்கும் குப்பைகள், மக்காத  குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாக்கி வருகின்றனர்.  தற்போது பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்கும் வகையில் ரூ.1.65 கோடி  மதிப்பீட்டில் புதியதாக ஒரு யூனிட் அமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர்  வரும் 11ம் தேதி விடப்படவுள்ளதாகவும், அதற்கு பிறகு பிளாஸ்டிக்கை எரிக்கும்  யூனிட் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக்கும் அப்புறப்படுத்தப்படும் என மாநகாட்சி  ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர்  இளங்கோவன் கூறியதாவது: வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கில் 4 லட்சம் கியூபிக்  மீட்டரும், வைராபாளையம் குப்பைக்கிடங்கில் 1.15 லட்சம் கியூபிக் மீட்டரும்  குப்பைகள் உள்ளது. இதில் வைராபாளையத்தில் 75 ஆயிரம் கியூபிக் மீட்டர்  குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கும் 40  ஆயிரம் கியூபிக் குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள்  ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும். இந்த குப்பைகளில் இருந்து  பிரிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக்கை எரித்து அதில் இருந்து வரும் சாம்பலை  சிமெண்ட் உற்பத்திக்கு பயன்படுத்தும் வகையில் 2 யூனிட்டுகள்  அமைக்கப்படவுள்ளது.

இதில் தினசரி 10 டன் பிளாஸ்டிக்கை எரிக்க தனியார்  அமைப்பினர் யூனிட் அமைத்து கொடுக்க முன் வந்துள்ளனர். மாநகராட்சி சார்பில்  தினசரி 25 டன் பிளாஸ்டிக்கை எரிக்க பெரிய அளவிலான யூனிட்  அமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விட்ட பிறகு பணிகள் தொடங்கும். தினசரி  பிளாஸ்டிக்கை எரிப்பதன் மூலமாக வரும் சாம்பலை சிமெண்ட் தயாரிக்க அனுப்பி  வைத்து விடுவோம்.  ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை பிரித்து  அப்புறப்படுத்தும் வகையில் 19 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்  அமைக்கப்பட்டு அங்கு பணிகள் நடந்து வருகிறது. பிளாஸ்டிக்கையும் எரிப்பதால்  மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பது குறைந்து விடும் என கூறினார்.

Tags : Wairarapalayam ,
× RELATED வைராபாளையம் குப்பை கிடங்கில் 48 ஆயிரம் கியூபிக் குப்பை அகற்றம்