×

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை ஆட்சேபனை மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை பணிகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

வேலூர், மார்ச் 10:புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தொடர்பான ஆட்சேபனை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களின் வார்டு மறுவரையறை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து வரைவு அறிக்கை வெளியாகி உள்ளது.

மேலும், வரைவு அறிக்கை வெளியான பிறகு, அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, வார்டு மறுவரையறை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதிய மாவட்டங்களிலும் மாநில தேர்தல் ஆணையர் நேரடியாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தி முடித்துள்ளார்.இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளித்த மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்த அறிக்கையை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வார்டு மறுவரையறை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சினர் மாவட்ட அளவில் நடந்த கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்த மனுக்கள் மற்றும் மாநில தேர்தல் ஆணையர் நடத்திய கருத்துகேட்பு கூட்டத்தில் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே கலெக்டர்களிடம் அளித்த பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருசில மனுக்கள் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியாமல் உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் மாநில தேர்தல் ஆணையரிடம் வழங்கிய அனைத்து மனுக்கள் மீது நேரடி விசாரணையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்சேபனை மனு மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தனியாக அறிக்கை தயார் செய்யப்படும். இவை அனைத்தும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அதற்கான இறுதிமுடிவை மாநில தேர்தல் ஆணையம்தான் எடுக்கும். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், குளறுபடி இல்லாத வகையிலும் வார்டு மறுவரையறை செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : government ,State Election Commission ,districts ,ward redevelopment petitions ,
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...