திருவாரூரில் நாளை முதல்வருக்கு பாராட்டு விழா அனைவரும் திரளாக பங்கேற்க அமைச்சர் காமராஜ் அழைப்பு

திருவாரூர், மார்ச் 6: திருவாரூரில் விவசாயிகள் சார்பில் நாளை நடைபெறும் முதல்வருக்கான பாராட்டு விழாவில் அனைவரும் திரளாக பங்கேற்குமாறு அமைச்சர் காமராஜ் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நாளை ( 7ம் தேதி ) மாலை 4.30 மணிக்கு அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஏற்புரை ஆற்றுகின்றனர். விழா தொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஜீவநதியாக விளங்குவது காவிரியாகும். தமிழகத்தின் மன்னர்கள் காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலம் வரை போற்றி பாதுகாத்து வந்ந காவிரிநீர் உரிமை கேள்விக்குறியாக மாறிய நிலையில் உரிமையை பாதுகாக்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முதன்முதலாக 1986 ல் அன்றைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை வலுப்பெற்றதன் அடிப்படையிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

அதுமுதல் இன்று வரை காவிரி நீர் பிரச்சனையில் ஒரு தெளிவான நிலைபாட்டை எடுத்து சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டதுடன் நடுவர் மன்ற தீர்ப்பையும் அரசிதழில் வெளியிட செய்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. பின்னர் இதற்கு ஒரு இறுதி தீர்வு ஏற்படுத்தும் வகையில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம்ஆகியோரின் தொடர் நடவடிக்கையால் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து அதற்கான அரசாணையினையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு இமாலய சாதனை புரிந்துள்ளார். வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த உத்தரவினை வழங்கியதற்காக முதல்வர் பழனிச்சாமிக்கு அனைத்து விவசாய சங்கங்களும் சேர்ந்து காவிரி ரெங்கநாதன் தலைமையில் நன்றி பாராட்டும் விழாவினை திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் நாளை நடத்துகின்றனர். இந்த விழாவில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்டு ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.

இந்த விழாவில் விவசாயிகள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். மேலும் இந்த நன்றி பாராட்டும் விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் முதல்வருக்கு நாளை (7ம் தேதி) காலை 8 மணிக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் விவசாயிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>