×

வெப்பத்தின் தாக்கத்தால் உடல் அயற்சி நோய் தடுக்க கறவை பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை மாற்றி அமைக்கலாம்

திருவாரூர், மே 6: வெப்பத்தின் தாக்கத்தால் உடல் அயற்சி நோய் தடுக்க கறவைப்பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை மாற்றி அமைக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு விளக்கம் அளித்துன்னார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் நாளுக்குநாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்லதயங்கி வருகின்றனா. இத்தகைய சுழலில் நம்மை சார்ந்து வாழும் கால்நடைகளை கோடை கால வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது நம் கடமையாகும்.
இதனை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட கால்நடை பராமாப்புத்துறை வழிகாட்டுதலின் படி கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பின்வரும் ஆலோசனைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் கால்நடைகள் குறிப்பாக கறவைப்பசுக்களில் ஏற்படும் உடல் அயற்சியை தடுப்பதற்கு கறவைப்பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணிவரையிலும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் என மாற்றி அமைக்கலாம். கோடையில் பால் உற்பத்தியும், சினைமாடுகளில் கன்று வளர்ச்சியும் குறையவாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க போதுமான அளவு பசுந்தீவனம் மற்றம் பசும்புல் வழங்க வேண்டும். மதிய வேளையில் பசுக்களை குளிப்பாட்டுவதன் மூலமும் உடல் வெப்பத்தை தணித்து பால் உற்பத்தி குறையாமல் பாதுகாக்கலாம். உலோகம், கல்நார் மற்றும் கான்கீரிட் கொட்டகையில் வெப்பத்தை தணிக்க கொட்டகையின் மேற்புறத்தில் தென்னங்கீற்றுகள், பனைஓலைகள், ஈரப்படுத்தப்பட்ட சாக்குத்துணிகள், விரைவாய் வளரும் பசுங்கொடிகள் ஆகியவற்றை பரவவிடுதல் வேண்டும். மேலும் அவற்றில் அவ்வப்போது தண்ணீர் தெளித்துவிடுதல் அவசியம். கொட்டகை காற்றோட்டமாக இருப்பது அவசியம். வாய்ப்பிருந்தால் மின்விசிறி மற்றும் நீர் தெளிப்பாணை பயன்படுத்துவதன் மூலம் கொட்டகையில் வெப்பத்தின் அளவை குறைக்கலாம். கால்நடைகளுக்கு ஏற்படும் கோடைகால உடல் அயற்சியை போக்க அதிக அளவு குளிர்ந்த குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் குடிநீரில் தாதுஉப்பு மற்றும் வைட்டமின் டானிக் கலந்து கொடுக்க வேண்டும். கோடை காலத்தில் குறைந்தது 3 முறையேனும் தண்ணீர் வழங்குதல் அவசியம்.

பசுவினங்களில் கோமாரி நோய், தோல் கழலை நோய் மற்றும் ஆடுகளில் ஆட்டுக்கொல்லி நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. இதனை தவிர்க்க முன்னெச்சாக்கையாய் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.
மேலும் உண்ணிக்காய்ச்சல் அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம். வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல், குறைந்த உணவு உட்கொள்ளுதல், அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், தோல் தன்பொழிவுத் தன்மையை இழத்தல், படபடப்புடன் அதிகப்படியான இதய மற்றும் சுவாசத்துடிப்பு, மூச்சு இரைப்பு, கருவிழி சுருங்கி உள்நோக்கி செல்லுதல், அதிக பசுந்தீவனத்தை மட்டும் விரும்பி உண்ணுதல், வெயிலில் நிழலை தேடி செல்லுதல், பாலில் திடத்தன்மை குறைதல், உற்பத்தி திறனும் குறைதல், உடலில் நீர்ச்சத்துகுறைபாட்டின் காரணமாக திடீரென மயங்கிவிழுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

வெப்ப அயற்சி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை நிழற்பாங்கான பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும். நனைந்த துணிகளை கால்நடைகளின் உடலில் சுற்றிவிட வேண்டும். குளிர்ந்த எலெக்ரொலைட் நிறைந்த குடிநீரை பாதிப்படைந்த கால்நடைகளுக்கு வழங்கவேண்டும். காலம் தாழ்த்தாமல் கால்நடை மருத்துவரை அழைத்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post வெப்பத்தின் தாக்கத்தால் உடல் அயற்சி நோய் தடுக்க கறவை பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை மாற்றி அமைக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,District ,Collector ,Saru ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...