க.பரமத்தி, மார்ச் 6: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் கொளுத்தி வரும் வெயிலால் கால்நடைகளுக்காக விதைப்பு செய்யப்பட்ட கால்நடைதீவன சோளப் பயிர்கள் கருகுகின்றன. இதனால் தீவன பற்றாக்குறை ஏற்பட்டு இந்த ஆண்டும் கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்படுமோ என்று விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் அணைப்பாளையம், அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, காருடையம்பாளையம், கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புஞ்சைகாளகுறிச்சி, நடந்தை, நெடுங்கூர், க.பரமத்தி, பவித்திரம், நஞ்சைகாளகுறிச்சி, புன்னம், ராஜபுரம், சூடாமணி, தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, தொக்குப்பட்டி, துக்காச்சி, தும்பிவாடி, விஸ்வநாதபுரி என 30 ஊராட்சிகள் உள்ளன.
இங்குள்ள குக்கிராம மக்களின் வாழ்வாதாரம், கால்நடைகள் வளர்ப்பு தான். அனைத்து விவசாயிகளும் கறவைபசு மற்றும் எருமைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகளின் முக்கிய தீவனம் சோளத்தட்டு. இங்குள்ள விவசாய நிலங்களில், தற்போது கால்நடைகளின் தீவனத்துக்காக மட்டுமே சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவமழை காலங்களில் புன்செய் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளப் பயிர்கள் வளர்ந்த பின்னர் அறுவடை செய்து அவற்றை (போர்) வைத்து சேமித்து பயன்படுத்துவர். பின்னர், அவற்றை அடுத்த ஆண்டு மீண்டும் சோளத்தட்டு அறுவடை நடைபெறும் வரை கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தி வருவது வழக்கம்.
ஆனால், கடந்த ஆண்டு தேவையான அளவுக்கு பருவ மழை பெய்யாமல் பொய்த்துப் போனது. இதனால் சோளப்பயிர் கருகிப்போனதால் கால்நடைகளுக்கு தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதிக விலை கொடுத்து வாங்கி நீண்டகாலம் கால்நடைகளை வளர்க்க முடியாது என்பதால் விரக்தியடைந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்று விட்டனர். ஒரு சிலர், நன்செய் பகுதிகளில் விளைந்த சோளத்தட்டைகளை அதிக விலைக்கு வாங்கி வந்து கால்நடைகளை காப்பாற்றி வந்தனர்.
இதனிடையே, கடந்த மாதங்களில் பெய்த மழையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் புன்செய் நிலங்களில் சோளம் விதைத்தனர். சோளம் முளைத்து நன்கு செழித்து வளர்ந்த நிலையில் தொடர்ந்து மழைபெய்யவில்லை. மாறாக கோடையைபோல் வெயில் கொளுத்த துவங்கியது. இதனால் இளம் சோளப்பயிர்கள் அனைத்தும் காய்ந்தும், கருகியும் வருகின்றன.
ஈரப்பதம் குறைவாக உள்ள நிலத்தின் ஓரப் பகுதிகளில் முழுமையாக கருகி விட்ட சோளப்பயிர்கள் நடுப் பகுதிகளிலும் கடுமையாக வாடி வருகின்றன. இன்னும் 10 நாட்களுக்குள் மழை பெய்யவில்லை என்றால் பயிரிடப்பட்டுள்ள அனைத்து சோளப் பயிர்களும் முழுமையாக கருகி விடும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கால்நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையால் மிச்சம் மீதியுள்ள கால்நடைகளையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமா என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வருண பகவான் மழை பொழிவாரா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.