×

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 338 மூட்டை துவரை கொள்முதல்

தர்மபுரி, மார்ச் 6:தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் நேற்று வரை 50 கிலோ எடை கொண்ட 338 மூட்டை துவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ ₹58 வீதம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மற்றும் பென்னாகரம் வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கடந்த 24ம்தேதி முதல் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் துவரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையாக துவரை கிலோ ஒன்றுக்கு ₹58 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

 இதுவரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும், 41 விவசாயிகளிடமிருந்து தலா 50 கிலோ எடை கொண்ட 338 மூட்டை கொள்முதல் (16,900 கிலோ) செய்யப்பட்டுள்ளது. துவரை வரும் ஏப்ரல் 22ம் தேதி வரை தர்மபுரி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் நடைபெறும். தர்மபுரி மாவட்ட சுற்றுவட்டாரங்களில் உள்ள விவசாயிகள், அரசு கொள்முதல் மையத்தை அணுகி தங்களிடமிருக்கும் துவரையை நில சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய விபரங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். தர்மபுரி, பென்னாகரம் மற்றும் அரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி, தங்கள் உற்பத்தி செய்த துவரையை விற்பனை செய்து பயனடையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா