×

திருவில்லிபுத்தூரில் சாலையில் திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டிகளால் ஆபத்து மூடி போட்டு மூட திமுக கோரிக்கை

திருவில்லிபுத்தூர், மார்ச் 6: திருவில்லிபுத்தூர் நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு அனைத்திலும் நகராட்சி குடிநீர் பொதுக்குழாய்கள் உள்ளன. இந்த குழாய்களைச் சுற்றி பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான இடங்களில் குடிநீர் தொட்டிகள் எவ்வித தடுப்புமுமின்றி மூடியில்லாமல் திறந்த நிலையில் தரையோடு தரையாக உள்ளது. பொதுமக்கள் அதிகமாக நெருக்கமாக வசிக்கும் முக்கிய குடியிருப்பு மற்றும் வாகனங்கள் அதிகமாக செல்லும் இடங்களில் தரையோடு, தரையாக திறந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதலியார்பட்டித்தெரு பகுதியில் இரண்டு இடங்களிலும், பேட்டை கடைத்தெரு பகுதியில் ஒரு இடத்திலும் மற்றும் நகரில் பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் உள்ளன.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு முதலியார்பட்டி தெருவில் திறந்து கிடந்த குடிநீர் தொட்டியில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்தும் பசுவை வெளியேற்ற முடியவில்லை. இதைதொடர்ந்து திருவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ஜெயராஜ் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி பசுமாட்டை மீட்டு வெளியே விட்டனர். தொட்டிற்குள் உள்ளே விழுந்த பசுமாட்டிற்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இதேபோல் சிறு குழந்தைகளும், முதியவர்களும் விழும் சூழல் அதிகமாக உள்ளது. எனவே, முதலியார்பட்டித்தெரு, பேட்டை கடைத்தெரு உட்பட நகரின் பல்வேறு இடங்களில் திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தினர் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூர் திமுக நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் கூறுகையில், ``நகரில் பெரும்பாலான குடிநீர் குழாய்கள் தரையோடு தரையாக திறந்த நிலையில் உள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தடுப்புச்சுவர் அமைந்து பாதுகாப்பாக உள்ளது. திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டிக்குள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பசுமாடு விழுந்துவிட்டது.அந்த இடத்தில் குழந்தையோ, முதியவரை விழுந்தால் படுகாயம் ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். மேலும் திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் குழாய்கள் உள்ள பகுதிகளில் அந்த பகுதி மக்கள் வாகனங்களிலும் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகத்தினர் மெத்தனமாக இல்லாமல் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு ஏதாவது விபத்து ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் நடக்கும் முன்பு திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் குழாய்களை மூடி போட்டு மூடி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : DMK ,closure ,road ,Thiruviliputhur ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...