×

விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு உரிய ஆவணங்கள் வழங்காததால் கருத்து கேட்பு கூட்டம் புறக்கணிப்பு

திருப்பூர், மார்ச்.6: திருப்பூர் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் பதிப்பது தொடர்பான உரிய ஆவணங்கள் அரசு வழங்காததால் கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் கோவை  இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவன்கொந்தி வரை விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தினால் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மொத்த திட்டமும் 310 கி.மீ. ஆகும். இதில் 10 கி.மீ. மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் வருகிறது. மீதமுள்ள 300 கி.மீ. தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்குள் உள்ள விளைநிலங்களுக்குள் வருகிறது. இதனால், 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்படும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில்  அலகுமலை, கண்டியன்கோயில், சிவன்மலை உள்ளிட்ட 6 ஊராட்சிகளைச் சேர்ந்த 50 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆகையால், இத்தகைய திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை தனித் துணை கலெக்டர் முன்னிலையில் நடைபெறவுள்ள விசாரணைக்கு கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த அலகுமலை பகுதியை சேர்ந்த 21 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

நேற்று திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விவசாயிகளை தனித்தனியாக அழைத்து எண்ணெய் குழாய் குறித்து கருத்து கேட்பது கூடாது. விவசாயிகள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனக்கோரி விவசாயிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் பொறித்த பதாகை கொண்டு தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

அப்போது, ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையில் போலீசார் விவசாயிகளை தடுத்தி நிறுத்தினார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தனித்துணை கலெக்டர் புஷ்பா விவசாயிகளை நேரில் சந்தித்து ஒரு சிலர் மட்டுமே உள்ளே வர வேண்டும் என தெரிவித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கம் பொன்னய்யன், ஐ.டி.பி.எல் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர், விவசாயிகள் பதிவு தபாலில் கேட்டிருந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இக்கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bureau of Investigation ,lands ,
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்