×

அடிப்படை வசதியின்றி திணறும் கோவை சிறை கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவதி

கோவை, மார்ச்.6: கோவை மத்திய சிறைச்சாலை அடிப்படை வசதிகளின்றி இருப்பதால் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டமின்றி அண்டை மாவட்டமான ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்ளனர். இவர்களை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கானோர் பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்யப்படாமலும், உட்காருவதற்கு இடம் இல்லாமலும் சிறை வளாகத்தில் நீண்ட நேரம் காத்துக்கிடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளை பார்க்க காலை 6 மணியில் இருந்தே பெண்கள் கைக்குழந்தையுடனும், கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கால் கடுக்க காத்திருக்கின்றனர். காலை 9 மணிக்கு கைதிகளை பார்க்க மனு கொடுத்து, பதிவு செய்த மனுவை சிறைக்காவலர்களிடம் கொடுத்து கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 12 மணிக்கு பார்வை நேரம் முடிக்கப்படுவதால் மனு கொடுத்தவர்களில் ஒரு சிலர் மட்டுமே கைதிகளை பார்க்கின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே மனு கொடுத்த ஏராளமானோர் காத்திருக்கின்றனர். பின்னர் மீண்டும் 2 மணி முதல் 5 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

இடையில் விஐபி விசிட் வேறு நடக்கிறது. இதனால் நாள் முழுவதும் பல மணி நேரங்கள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. இவ்வாறு சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக அமர்வதற்கு இருக்கை வசதி கூட இல்லை. இதன் காரணமாக அங்குள்ள கழிவு நீர் தொட்டி மீதுதான் பலர் அமர்ந்துள்ளனர். கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு கூட மறைவான இடம் இல்லாமல் அவதியடைகின்றனர். இதனால் பெண்கள் தர்மசங்கடமாக உணர்கின்றனர். மழைக்காலங்களில் இதனை விட கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

ஒதுங்குவதற்கு கூட இடம் கிடைப்பதில்லை. அங்குள்ள சிறைக்காவலர்கள் பல விதமான கண்டிஷன்களை போடுவதால் ஏற்கனவே தனது உறவினர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மன வருத்தத்தில் வரும் பார்வையாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அங்குள்ள கழிவறையில், பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் கழிவறை அசுத்தமாக காட்சியளிப்பதுடன் மூக்கை பொத்திக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவனை பார்க்க வரும் பெண்களில் சிலர் தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வருகின்றனர். கால தாமதம் ஆவதால் அவசர தேவைக்கு அண்டை வீட்டாரை தொடர்பு கொண்டு தங்களது பிள்ளைகளை பார்த்துகொள்ளுமாறு சொல்வதற்கு கூட தொலை பேசி வசதி செய்து தரப்படவில்லை. இலவசமாகவோ அல்லது கட்டணத்தில் போன் பேசும் வசதியையோ செய்து கொடுக்க வேண்டும். எனவே தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்லும் கோவை மத்திய சிறைச்சாலையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : relatives ,prison inmates ,Avi ,facilities ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...