×

திருவண்ணாமலையில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர் கைது லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

திருவண்ணாமலை, மார்ச் 6: திருவண்ணாமலையில் வழக்குப் பதிவு செய்வதை தவிர்க்க, ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 சப்-இன்ஸ்பெக்டர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் அசோக்(32). இவரது உறவினர் கிருஷ்ணவேணி. இவர், அண்ணாமலையார் கோயில் அருகே, பக்தர்கள் பொருட்கள் பாதுகாப்பிடம் நடத்தி வருகிறார். இங்கு கடந்த மாதம் 25ம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பக்தர் ஒருவரின், லேப்டாப் வைத்திருந்த ‘லக்கேஜ் பேக்’ காணாமல் போனது. இதையடுத்து திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு போலீசில் அந்த பக்தர் புகார் அளித்தார். அதன்பேரில், நகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகிேயார் விசாரணை நடத்தினர். பொருட்கள் பாதுகாப்பிடத்தில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, வேறொரு நபர் அந்த ‘லக்கேஜ் பேக்’யை பெற்றுச்செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து, அசோக் மற்றும் உறவினர் கிருஷ்ணவேணியிடம் விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோர், திட்டமிட்டு வேறோருவருக்கு ‘லக்கேஜ் பேக்’ யை மாற்றி கொடுத்து அனுப்பியதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என கூறி இரண்டு நாட்கள் இருவரையும் காவல் நிலையம் வரவழைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது, சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நபரின் உருவம் தெளிவாக தெரிவதால், அவர் யாரென கண்டுபிடித்து விசாரிக்குமாறு அசோக் கேட்டாராம். ஆனால், அதை ஏற்க மறுத்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ₹25 ஆயிரம் கேட்டார்களாம். அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி ₹15 ஆயிரத்தை, சப்- இன்ஸ்பெக்டர்களிடம் அசோக் கொடுத்தார். மேலும், ₹10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டினார்களாம்.  மேலும், பணம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டிபேரில் ரசாயனம் தடவி ₹5 ஆயிரத்தை, நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோரிடம் நேற்று மதியம் 12 மணியளவில் அசோக் கொடுத்தார். இருவரும் அவற்றை எண்ணி சரிபார்த்து மேஜையில் வைத்தனர்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன், இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், மைதிலி ஆகியோர், லஞ்சம் வாங்கிய சப்- இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து, காவல் நிலையத்தில் இருவரும் ஏற்கனவே பதிவு செய்த வழக்கு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்ட இரண்டு சப்- இன்ஸ்பெக்டர்களும், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் புகார் கொடுத்தவர்களையே மிரட்டி பணம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல், குற்றவாளிகளை விடுவிக்கவும், குற்றத்தின் தன்மையை மூடி மறைக்கவும் முயன்று இருக்கலாம் என்பதால், இருவரும் இதுவரை விசாரித்த வழக்கு விசாரணைகளை மறு ஆய்வு செய்யவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர். குற்றங்களை தடுக்க வேண்டிய குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர்களே, லஞ்சம் வாங்கியபோது கைதான சம்பவம் அதிர்ச்சிையயும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sub-Inspector ,
× RELATED ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது